அரசுப் பள்ளியில் மகனை சேர்த்த புதுச்சேரி கல்வித்துறை இயக்குநர்: ரோல் மாடலான அதிகாரிக்கு குவியும் அப்ளாஸ்…!!
Author: Rajesh14 March 2022, 4:50 pm
புதுவை: புதுச்சேரி கல்வித்துறை இயக்குநர் ருத்ரகவுடு தனது மகன் அஸுகோஷை லாஸ்பேட்டை அரசு நடுநிலைப் பள்ளியில் சேர்த்தார்.
புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில், உயர்நிலைப் பள்ளி மற்றும் கல்லூரிகள் மற்றும் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டன. கடந்த இரு ஆண்டுகளாக மழலையர் வகுப்புகளான எல்.கே.ஜி., யூ.கே.ஜி., வகுப்புகள் மட்டும் திறக்கப்படவே இல்லை.
இந்நிலையில், புதுச்சேரி மாநிலம் முழுவதும் இன்று மழலையர் பள்ளி திறக்க அரசு அனுமதி அளித்தது. இரண்டு வருடங்களுக்குப் பிறகு மழலையர் பள்ளி திறக்கப்பட்டுள்ளதால் மழலையர் தங்களது பெற்றோருடன் உற்சாகமாக பள்ளிக்கு வருகை தந்தனர். குழந்தைகளை கதை சொல்லியும், பாட்டுபாடியும் ஆசிரியர்கள் அவர்களின் தயக்கத்தைப் போக்கும் முயற்சியை அரசு பள்ளிகளில் தொடங்கினர்.
பள்ளி சூழல் என்பதை காட்டாமல் விளையாட்டுக் கூடமாக வகுப்பறைகளை வடிவமைத்து இருந்தது மாணவர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. இந்நிலையில் லாஸ்பேட்டை அரசு நடுநிலைப்பள்ளிக்கு புதுச்சேரி கல்வித்துறை இயக்குநர் ருத்ரகவுடு தனது மனைவி மகனுடன் வந்தார்.
பள்ளி முதலமைச்சர் பாஸ்கரராஜூவிடம் தனது மகனை எல்கேஜியில் சேர்க்க வந்துள்ளதாகத் தெரிவித்தார். இதையடுத்து அவரது மகன் அஸுகோஷை பள்ளியில் சேர்த்தனர். இதுபற்றி கல்வித்துறை இயக்குநர் ருத்ரகவுடு பேசுகையில்,
கொரோனா குறைவால் மழலையர் வகுப்புகளை இன்று திறக்கலாம் என்று உத்தரவு பிறப்பித்திருந்தேன். எனது மகனையும் பள்ளியில் சேர்க்கலாம் என்று முடிவு எடுத்து வீட்டருகே உள்ள அரசு பள்ளியில் வந்து சேர்த்தோம். அரசுப் பள்ளிகளில் நன்றாக ஆசிரியர்கள் பாடம் சொல்லி தருகிறார்கள். தரமும் நன்றாக உள்ளது.
அதன் அடிப்படையில் அரசுப் பள்ளியில் சேர்த்தது மகிழ்ச்சியாக இருக்கிறது. முதல்முறையாக மகன் பள்ளிக்கு வந்தது நல்ல அனுபவமாக இருந்தது என்று குறிப்பிட்டார்.