‘இதுதான் மெத்தையா..? இங்க வந்து படுங்க…’ பல்கலை., துணைவேந்தரை அவமதித்த அமைச்சர்.. வைரல் வீடியோ.. கிளம்பும் எதிர்ப்பு!!

Author: Babu Lakshmanan
30 July 2022, 11:57 am

அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் சேத்தன் சிங், பல்கலைக்கழக துணைவேந்தரை அவமதிக்கும் வகையில் நடந்து கொண்டதற்கு எதிர்ப்புகள் கிளம்பி வருகின்றன.

பஞ்சாப் மாநில சுகாதார அமைச்சர் சேத்தன் சிங் ஜூரமஜ்ரா, ஃபரித்கோட்டில் உள்ள குருகோவிந்த் சிங் அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, அவருடன் அதிகாரிகளும், பத்திரிக்கையாளர்களும் உடன் சென்றிருந்தனர்.

அப்போது, நோயாளிகளுக்கான வார்டுகளில் ஆய்வு செய்யும் போது, அங்கு சுகாதாரமற்ற நிலவியதைக் கண்டு அமைச்சர் சேத்தன் சிங் கோபமடைந்தார். மேலும், நோயாளிகளுக்கான படுக்கையில் பயன்படுத்தும் மெத்தை மிகவும் மோசமான நிலையில் இருப்பதை கண்ட அவர், இன்னும் கோபத்திற்கு ஆளானார்.

ஆத்திரமடைந்த அமைச்சர் படுக்கையின் நிலை குறித்து கேள்வி எழுப்பியவாறு, பாபா ஃபரித் சுகாதார அறிவியல் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் டாக்டர் ராஜ் பகதூரை அந்த மெத்தையில் படுக்க உத்தரவிட்டார். அதனை ஏற்று அவரும் அதில் படுத்து, மெத்தையின் நிலையை உணர்ந்தார்.

அமைச்சரின் இந்த செயலை அங்கிருந்தவர்கள் வீடியோவாக பதிவு செய்தனர். அந்த வீடியோவில், “எல்லாம் உங்கள் கையில், எல்லாம் உங்கள் கையில்” என்று அமைச்சர் ஜூரமஜ்ரா படுக்கையில் இருந்து எழுந்தவுடன் மருத்துவரிடம் சொல்வது அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.

அமைச்சர் சேத்தன் சிங்கின் இந்த செயலுக்கு எதிர்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. அதாவது, அரசு மருத்துவமனையின் நிலையை கண்டு அமைச்சர் இந்த கோபம் அடைந்தது நியாயமாக இருந்தாலும் கூட, துணைவேந்தரை இப்படி அவமதிக்கலாமா..? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இது குறித்து காங்கிரஸ் கட்சியின் பர்கத் சிங் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “ஆம் ஆத்மி கட்சியின் மலிவான நாடகங்கள் நிறுத்தப்போவதில்லை. இன்று பாபா ஃபரித் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ராஜ் பகதூர் சிங், சுகாதார அமைச்சர் சேத்தன் சிங் ஜூரமஜ்ராவால் (+2 பாஸ்) பகிரங்கமாக அவமானப்படுத்தப்பட்டார். இந்த வகையான கும்பல் நடத்தை நமது மருத்துவ ஊழியர்களின் மன உறுதியைக் குலைக்கும்,” என்று தெரிவித்துள்ளார்.

கடந்த மே மாதம், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், ஊழல் குற்றச்சாட்டில் தனது அப்போதைய சுகாதார அமைச்சர் விஜய் சிங்லாவை அமைச்சரவையில் இருந்து நீக்கியது குறிப்பிடத்தக்கது.

  • Rajinikanth Apologize To Nepoleon போன் போட்டு மன்னிப்பு கேட்ட ரஜினிகாந்த்… நேற்று என்ன நடந்தது?
  • Views: - 668

    0

    0