மறைந்த தொழிலதிபர் ரத்தன் டாடாவின் செல்லப்பிராணி கோவா என்ற நாய் உயிரிழந்ததில் உண்மையில்லை என உறுதியாகியுள்ளது.
மும்பை: இந்திய வர்த்தகத் துறையின் மிக முக்கிய தொழிலதிபர்களில் ஒருவர் ரத்தன் டாடா. பிரபல உற்பத்தி நிறுவனமான டாடா குழுமத்தின் தலைவராக சுமார் 10 வருடங்களுக்கும் மேலாக நீடித்து, நடுத்தர மக்கள் பயன்பாட்டுக்காக பல உற்பத்தி பொருட்களை சந்தைக்கு கொண்டு வந்ததில் ரத்தன் டாடா மிக முக்கிய பங்கு வகித்தவர்.
இவர் கடந்த அக்டோபர் 9ஆம் தேதி வயோதிகம் மற்றும் சில வழக்கமான பரிசோதனைகளுக்காக மும்பையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அன்றிரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து, அவரது மறைவிற்கு அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள், தொழில் முனைவோர்கள், சினிமா நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் நேரிலும், சமூக வலைத்தளங்கள் வாயிலாகவும் இரங்கல் தெரிவித்தனர்.
இதனையடுத்து, அவரது உடல் ரத்தன் டாடா சார்ந்த பார்சி சமூக முறைப்படி நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்த துயரமான நேரங்களில் இறுதிச் சடங்குகள் வரை, அவரது வளர்ப்பு செல்லப்பிராணியான கோவா (Goa dog) என்ற நாய் இருந்ததை வீடியோக்களில் பார்க்க முடிந்தது.

இந்த நிலையில், இந்த கோவா நாய், ரத்தன் டாடா மறைந்த 3 நாட்களில் மறைந்து விட்டதாக சமூக வலைத்தளங்களில் தீயாய் தகவல் பரவியது. ஆனால், இதில் எவ்வித உண்மையும் இல்லை என மும்பையின் போரிவாலியில் உள்ள MHB காவல் நிலையத்தின் மூத்த காவலர் சுதீர் குடால்கர் தெரிவித்துள்ளார். இவர் தனது காவல் நிலையம் அருகில் இருக்கும் தெருநாய்களுக்கு உணவளித்து, செல்லப்பிராணிகள் மீது அலாதிப் பிரியம் கொண்டவர் என அறியப்படுகிறது.
இதையும் படிங்க: டாடா அறக்கட்டளை தலைவராக ரத்தன் டாடா சகோதரர்.. யார் இந்த நோயல் டாடா?
மேலும், இது குறித்து சுதீர் குடால்கர் வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவில், “கோவா நாய் நல்ல முறையில் இருக்கிறது. இதனை நான் ரத்தன் டாடா அவர்களின் நெருங்கிய நண்பரும், அவரது உதவியாளருமான ஷாந்தனு நாயுடுவிடம் உறுதிப்படுத்தி உள்ளேன்” எனக் குறிப்பிட்டுள்ளார். இதனால் அனைவரும் கோவா நாய்க்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.