ரூ.6 லட்சத்தை திருடிய நபர் மாயம்…உயிரிழந்ததாக எண்ணி வேறொரு சடலத்தை புதைத்த உறவினர்கள்: 9 மாதங்களுக்கு பிறகு உயிருடன் வந்ததால் பரபரப்பு..!!

Author: Rajesh
9 May 2022, 1:18 pm

போபால்: 6 லட்சத்து 65 ஆயிரம் ரூபாயை திருடி சென்ற நபர் உயிரிழந்துவிட்டதாக உடலை உறவினர்கள் அடக்கம் செய்த நிலையில் 9 மாதங்களுக்கு பிறகு உயிருடன் வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியபிரதேச மாநிலம் ஷதார்பூர் மாவட்டம் பமிதா பகுதியில் இரும்புக்கம்பி மற்றும் அது சார்ந்த கடை நடத்தி வருபவர் சுதிர் அகர்வால். இவரது கடையில் டிரைவராக பணியாற்றி வந்தவர் சுனில் நாம்தேவ். இதற்கிடையில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 16ம் தேதி கடை உரிமையாளர் சுதிர் தனது டிரைவரை அழைத்து வாடிக்கையாளர் ஒருவருக்கு இரும்பு கம்பிகளை கொடுத்துவிட்டு வாடிக்கையாளர் தரும் 6 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய் பணத்தை வாங்கி வரும்படி அனுப்பியுள்ளார்.

ஆனால், வாடிக்கையாளரிடமிருந்து பணத்தை வாங்கிய சுனில் கடைக்கு வரவில்லை. இதனால், சந்தேகமடைந்த கடை உரிமையாளர் சுனிலை தேடியுள்ளார். அப்போது, இரும்பு கம்பிகள் வைக்கப்பட்டிருந்த குடோனுக்கு அருகே இரும்பு கம்பியை ஏற்றிச்சென்ற வாகனம் மட்டும் நிற்பதையும் சுனில் மாயமானதையும் கண்டுபிடித்தார்.

இதனால், பணத்தை எடுத்துக்கொண்டு சுனில் தப்பியோடிவிட்டதாக நினைத்து இது குறித்து போலீசில் புகார் அளித்துள்ளார். இதனை தொடர்ந்து கடந்த ஆண்டு ஜூலை 24ம் தேதி பமிதா பகுதியில் உள்ள ஹொடகர் என்ற இடத்தில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் கிடப்பதாக தகவல் கிடைத்தது. அந்த ஆண் சடலம் மாயமான சுனில் நாம்தேவ் என அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். மேலும், அந்த சடலம் சுனில் என நினைத்து உடலை அடக்கம் செய்தனர்.

அதேவேளை, அந்த ஆண் சடலத்தில் மேற்கொள்ளப்பட்ட டிஎன்ஏ பரிசோதனையில் சுனிலின் குடும்பத்தினரின் டிஎன்ஏ-வும் அந்த சடலத்தின் டிஎன்ஏ-வும் ஒத்துப்போகவில்லை. இதை சுதிர் கண்டுபிடித்துள்ளார். இந்நிலையில், கடந்த 3ம் தேதி இரும்பு கடை உரிமையாளர் சுதிர் ஷதார்பூர் பகுதியில் உள்ள பக்தேஷ்வர் தஹம் கோவிலுக்கு சென்றுள்ளார்.

கோவிலுக்கு செல்லும் வழியில் ஹதா டிஹாடா என்ற பகுதியில் உயிரிழந்ததாக அடக்கம் செய்யப்பட்ட சுனில் போன்ற நபர் சுற்றித்திரிந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக, அந்த நபரை மறித்த சுதிர் நீ சுனில் தானே என்னிடமிருந்து திருடிய பணத்தை கொடு என கேட்டுள்ளார். அதற்கு அந்த நபர் நான் சுனில் தான். போலீஸ் அறிக்கையின் படி நான் உயிரிழந்துவிட்டேன்.

இது குறித்து யாரிடமாவது கூறினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என சுனில் இரும்புக்கடை உரிமையாளர் சுதிரிடம் கூறியுள்ளார். இதை தொடர்ந்து உயிரிழந்ததாக கூறப்பட்ட சுனில் 9 மாதங்களுக்கு பின் உயிருடன் இருப்பதாகவும், வேறு நபரின் உடலையே சுனில் குடும்பத்தினர் அடக்கம் செய்துள்ளனர் என்றும் ஆதாரத்துடன் இரும்புக்கடை உரிமையாளர் சுதிர் போலீசில் புகார் அளித்தார்.

இந்த புகாரை தொடந்து சுனிலை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து 5 லட்ச ரூபாயை பறிமுதல் செய்தனர். பணத்துடன் தப்பிச்சென்று பின்னர் வேறு ஊரில் 9 மாதங்கள் வசித்ததாகவும் சுனில் கூறியுள்ளார். தனது குடும்பத்தினர் தான் என நினைத்து வேறு யாரையோ அடக்கம் செய்துள்ளனர் என்றும் சுனில் கூறியுள்ளார். இதையடுத்து, சுனிலின் குடும்பத்தினர் அடக்கம் செய்தது யார்? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 1100

    0

    0