கேரள ஓட்டுருக்கு மரண தண்டனை…. சவுதி சிறையிலேயே கழிந்த 18 ஆண்டுகள் ; ரூ.34 கோடியை திரட்டிய கேரள மக்கள்…!!!

Author: Babu Lakshmanan
13 April 2024, 5:13 pm

சவுதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கேரள டிரைவரை காப்பாற்றுவதற்காக சர்வதேச அளவில் மலையாளிகள் சங்கங்கள் இணைந்து ரூபாய் 34 கோடியை திரட்டிய சம்பவம் அனைவரையும் நெகிழச் செய்துள்ளது.

கேரள மாநிலம் கோழிக்கோட்டை சேர்ந்த அப்துல் ரஹீம் என்பவர் சவுதி அரேபியாவில் வசிக்கும் ஒருவரின் வீட்டிற்கு கார் ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார். இவர், கடந்த 2006ம் ஆண்டு, அவரது உரிமையாளரின் மாற்றுத்திறனாளி மகனுடன் காரில் சென்று கொண்டிருக்கும் போது விபத்து ஏற்பட்டுள்ளது. இதில், அந்த சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார்.

சிறுவனின் மரணத்திற்கு காரணமாக இருந்ததாக கைது செய்யப்பட்ட அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. சவுதி அரேபியாவை பொறுத்தவரை மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகள் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு இழப்பீட்டுத் தொகை கொடுத்து அவர்கள் மன்னித்தால் மரண தண்டனையில் இருந்து தப்பிக்க முடியும்.

அதன்படி, இவருக்கு 34 கோடி இழப்பீட்டுத் தொகை நிர்ணயிக்கப்பட்டது. அந்த பணத்தை கொடுத்து மன்னிப்பை பெற்றுக் கொண்டால் அவர் விடுதலை ஆகலாம் என்ற நிலை உருவானது.

மேலும் படிக்க: 29 பைசாவை மூட்டை கட்டி வீட்டில் தூங்க வைக்கும் வரை திமுக தூங்காது : உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம்!

இதையடுத்து, ரஹீமுக்கு ஆதரவாக சர்வதேச அளவில் மலையாளிகள் சங்கங்கள் பல இணைந்து நிதி திரட்ட ஆரம்பித்தன. பலரது முயற்சியின் காரணமாக, ரூ.34 கோடிக்கு மேலாகவே நிதி திரண்டது. இதையடுத்து, இனி யாரும் நிதி அனுப்ப வேண்டாம் என்று மலையாளி சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

விரைவில் திரட்டிய பணத்தை பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு கொடுத்து அப்துல் ரஹீம் விடுதலை செய்யப்பட்டு, கேரளா அழைத்து வரப்பட உள்ளார். கடந்த 18 வருடங்களாக சிறையில் வாடி வரும் அப்துல் ரஹீம், தற்போது சிறையில் இருந்து விடுதலையாக இருப்பது கேரள மக்களையே மகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

  • ajith offers siruthai siva the next film but siva refused என் அடுத்த படத்தை நீங்களே டைரக்ட் பண்ணுங்க- பிரபல இயக்குனரிடம் தானே முன் வந்து கேட்ட அஜித்!