சமாஜ்வாடி போட்ட புது குண்டு : அதிர்ச்சியில் I.N.D.I.A. கூட்டணி!
Author: Udayachandran RadhaKrishnan21 October 2023, 9:27 pm
ராஜஸ்தான், மத்திய பிரதேசம், தெலுங்கானா, சத்தீஸ்கர், மிசோரம் மாநிலங்களுக்கு சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்பு காங்கிரஸ், திமுக, ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட 28 எதிர்க்கட்சிகளின் இண்டியா கூட்டணி கலகலத்துப் போய் கலைந்துவிடும் நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறது.
தொடக்கத்தில் ஏற்பட்ட, மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசை எதிர் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வீழ்த்தியே ஆகவேண்டும் என்கிற எண்ணம் இந்த கூட்டணி கட்சிகளிடையே தற்போது படிப்படியாக தளர்ந்து வருவதும் அப்பட்டமாக தெரிகிறது.
குட்பை சொன்ன மார்க்சிஸ்ட்
ஏற்கனவே இக் கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட் நாடாளுமன்றத் தேர்தலின்போது கேரளா, மேற்கு வங்கம், பஞ்சாப், டெல்லி மாநிலங்களில் அங்குள்ள சூழ்நிலைக்கு ஏற்ப கூட்டணி அமைத்து போட்டியிடுவோம் என்று அறிவித்து அதிர்ச்சி அளித்தது. இதன் அர்த்தம் எங்களால் இண்டியா கூட்டணியுடன் எல்லா மாநிலங்களிலும் இணைந்து போட்டியிட முடியாது என்பதாகும்.
இதேபோல கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி நாடாளுமன்றத் தேர்தலின்போது டெல்லி, பஞ்சாப் மாநிலங்களில் தனித்தே போட்டியிடும் என்று அதிரடி காட்டியது.
5 மாநில தேர்தல் : இண்டியா கூட்டணி ஷாக்
இந்த நிலையில்தான் ராஜஸ்தான், மத்திய பிரதேசம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களின் தேர்தல் இண்டியா கூட்டணிக்கு இன்னொரு பெரும் தலைவலியாக உருவெடுத்து இருக்கிறது.
பாஜகவுக்கும், காங்கிரசுக்கும் கடும் போட்டி நிலவும் மத்திய பிரதேசத்தில், உத்தரபிரதேச எல்லையோர மாவட்டங்களின் 15-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் ஓரளவு செல்வாக்கு மிக்க கட்சியாக அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி திகழ்கிறது. இங்கே காங்கிரசுடன் கூட்டணி அமைத்து போட்டியிட விரும்பி அக் கட்சி தொகுதி
பங்கீடு பேச்சிலும் ஈடுபட்டு வந்தது.
டாட்டா காட்டும் சமாஜ்வாடி
ஆனால் இந்த பேச்சு தீவிரமாக நடந்து கொண்டிருந்தபோதே, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் மத்திய பிரதேச முன்னாள் முதலமைச்சருமான கமல்நாத் “இண்டியா கூட்டணி மக்களவை தேர்தலுக்கானது மட்டுமே” என்று ஒரு சர்ச்சை கருத்தை தெரிவித்தார்.
இதனால் அதிர்ச்சியடைந்த சமாஜ்வாடி, நள்ளிரவு ஒரு மணிக்கு மேலாக நீடித்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததாக உடனடியாக அறிவித்தது.
அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் கொந்தளித்து போய், செய்தியாளர்களிடம் காங்கிரசை போட்டு தாக்கினார்.
அவர் பேசும்போது,”மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாடி கட்சிகளுக்கு இடையேயான கூட்டணிப் பேச்சு தோல்வியில் முடிந்திருப்பது, 2024ம் ஆண்டு உத்தரப் பிரதேசத்தில் இண்டியா கூட்டணியின் திட்டங்களை பெரிதும் பாதிக்கும்.
எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் ஒரு பெரிய பங்காளியாக இருக்கும் காங்கிரஸ், மத்தியப் பிரதேசத்தில் தொகுதிப் பங்கீடு தொடர்பான எங்கள் குறைகளை நிவர்த்தி செய்யத் தவறிவிட்டது.
இண்டியா கூட்டணி தேசிய அளவில் உள்ளதா அல்லது மாநில அளவில் உள்ளதா என்பதை முதலில் காங்கிரஸ் மேலிடம் தெளிவுபடுத்த வேண்டும். இதில் மாநில அளவிலான கூட்டணி இல்லை என்றால், எதிர்காலத்தில் மற்ற மாநிலங்களிலும் ஒரே கூட்டணியாக இருக்காது.
காங்கிரஸ் வயிற்றில் புளியை கரைத்த அகிலேஷ்
தவிர இண்டியா கூட்டணி நாடாளுமன்றத் தேர்தலுக்காக மட்டுமே அமைக்கப்பட்டது என்று கூறி கூட்டணி கட்சிகளிடையே கமல்நாத் குழப்பத்தையும் ஏற்படுத்துகிறார். இது ஏற்புடையது அல்ல. பாஜக ஒரு வலுவான கட்டமைப்பை கொண்ட மிகப் பெரிய கட்சி. இது போன்றதொரு தேசிய கட்சியை தோற்கடிக்க வேண்டும் என்றால் எதிர்க்கட்சிகள் குழப்பம் இல்லாமல் துணிந்து எதிர்த்து நிற்க வேண்டும். இல்லையென்றால் அதை வீழ்த்துவது கடினம்.
உத்தரப்பிரதேசத்தில் உள்ள 80 தொகுதிகளிலும் பாஜகவை தோற்கடிக்க சமாஜ்வாடி முழுப்பொறுப்புடன் வியூகத்தை தயாரித்து வருகிறது”என்றும் கூறி அவர் காங்கிரஸ் வயிற்றில் புளியை கரைத் தார்.
அது மட்டுமின்றி அடுத்த சில மணி நேரங்களிலேயே மத்திய பிரதேசத்தில் 31 தொகுதிகளுக்கான வேட்பாளர்களையும் சமாஜ்வாடி
அறிவித்தது.
அக்கட்சியின் மூத்த தலைவர் ராஜேந்திர சவுத்ரி கூறுகையில், “மத்திய பிரதேசத்தில் இண்டியா கூட்டணியில் 6 தொகுதிகளில் போட்டியிட நாங்கள் விரும்பினோம். ஆனால், காங்கிரஸ் ஒரு சீட் கூட கொடுக்கவில்லை. இத்தனைக்கும் இதற்கு முன்பாக சமாஜ்வாடி இந்த மாநிலத்தில் சில இடங்களில் வென்றும் உள்ளது” என்று குறிப்பிட்டார்.
இதுகுறித்து காங்கிரஸ் தலைமை உடனடியாக கருத்து எதையும் தெரிவிக்கவில்லை. ஆனால் உத்தர பிரதேச மாநில காங்கிரஸ் தலைவர் அஜய் ராய் பேசும்போது,” சமாஜ்வாடிக்கு மத்திய பிரதேசத்தில் எந்த ஆதரவும் இல்லை. கடந்த 2018ம் ஆண்டு அங்கு நடந்த தேர்தலில் ஒரு இடத்தில் மட்டுமே அக்கட்சி வென்றது. அவர்களது செல்வாக்கு குறைவாக இருக்கும்போது, அதன் கோரிக்கைகளை ஏற்கக் கூடாது.
மத்திய பிரதேசத்தில் போட்டியிடுவதில் இருந்து சமாஜ்வாடி விலகிக்கொள்ள வேண்டும்” என்று வலியுறுத்தினார். இதற்கும் அகிலேஷ் யாதவ் சுடச்சுட பதிலடி கொடுத்தார்.
“இதுபோன்ற கருத்துகளை தெரிவிக்க கட்சியின் மாநில தலைவருக்கு அதிகாரம் இல்லை. பாட்னா, மும்பை நகரங்களில் நடந்த இண்டியா கூட்டணி கூட்டத்தில் அஜய் ராய் கலந்து கொள்ளவில்லை. இந்த கூட்டணி பற்றி அவருக்கு என்ன தெரியும்? காங்கிரஸில் அஜய் ராய் போன்ற சிலர் பாஜகவுடன் இணைந்து சதி வேலையில் ஈடுபட்டுள்ளனர். தனது கட்சி பற்றி கருத்து தெரிவிக்க, இதுபோன்ற சிறிய தலைவர்களை காங்கிரஸ் தலைமை அனுமதிக்கக் கூடாது. காங்கிரஸ் எங்களை ஏமாற்றும் என தெரிந்திருந்தால், நான் அவர்களை நம்பியிருக்க மாட்டேன். சட்டப்பேரவை தேர்தலில் கூட்டணி கிடையாது என முதல்நாளே தெரிந்திருந்தால், இண்டியா கூட்டணி கூட்டங்களுக்கு நாங்கள் சென்றிருக்க மாட்டோம்” என்று காட்டமாக சாடினார்.
இண்டியா கூட்டணியில் நீடிக்குமா சமாஜ்வாடி?
இப்படி அகிலேஷ் யாதவ் மனம் குமுறி இருப்பதன் மூலம் இந்தியா கூட்டணியில் சமாஜ்வாடி நீடிக்குமா? என்ற கேள்வி விஸ்வரூபம் எடுத்துள்ளது.
தவிர உத்தரப் பிரதேசத்தில் உள்ள 80 நாடாளுமன்ற தொகுதிகளில் காங்கிரஸுக்கு இரண்டு எம்பி சீட்டுகளுக்கு மேல் ஒதுக்குவதற்கு சமாஜ்வாடி தயாராக இல்லாத நிலையில், தற்போதைய மோதல் அதை இன்னும் மோசமடையச் செய்யலாம் என்கிறார்கள்.
“ஐந்து மாநில தேர்தல்களால் இண்டியா கூட்டணிக்குள் பகிரங்க மோதல் வெடித்திருப்பது திமுக, ஐக்கிய ஜனதா தளம், தேசியவாத காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம், தேசிய மாநாட்டு கட்சி, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா போன்ற மாநில கட்சிகளுக்கு தர்ம சங்கட நிலையையும், பெரும் கவலையையும் ஏற்படுத்தி விட்டிருப்பது உண்மை” என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
“ஏனென்றால் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் நோக்கத்துடன்தான் இண்டியா கூட்டணியே உருவாக்கப்பட்டது. ஆனால், சட்டப்பேரவை தேர்தல்களில் போட்டியிடுவது குறித்து அந்த கூட்டணியிடம் எந்தவொரு உறுதியான திட்டமும் இல்லை என்பது வெளிப்படையாகவே தெரிகிறது.
மாநிலத் தேர்தல்களையே ஒருங்கிணைந்து சந்திக்க முடியாத எதிர்க்கட்சிகள் நாடாளுமன்ற தேர்தலில் மட்டும் ஒரே அணியில் திரண்டு பாஜகவை வீழ்த்த முடியுமா?…என்ற கேள்வி அனைவரிடமும் எழுந்தால் அவற்றின் நிலைமை சிக்கல் ஆகிவிடும்.
மேலும் பிற மாநிலங்களில் தேர்தல் நடக்கும்போது இண்டியா கூட்டணியில் உள்ள கட்சிகள் நீடிக்குமா என்பதை உறுதியாக சொல்லவும் முடியாது.
அதிமுகவுக்கு லாபம்
அதுமட்டுமல்லாமல் தமிழகத்தில் திமுக தலைமையிலான இண்டியா கூட்டணியில் உள்ள விசிக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் போன்றவை 28 எதிர்க்கட்சிகளும் ஒருங்கிணைந்து போட்டியிட முடியாவிட்டால் அதிமுக கூட்டணியை நோக்கி செல்வதற்கும் வாய்ப்பும் உள்ளது.
ஏனென்றால் எதிர்க்கட்சிகளால் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை திருப்திகரமாக முடிக்க முடியவில்லையென்றால், இண்டியா கூட்டணி மத்தியில் ஆட்சியை கைப்பற்றுவது மிகவும் கடினமாகி விடும். பிரதமர் மோடி தலைமையிலான பாஜக மீண்டும் எளிதில் ஆட்சியை கைப்பற்றி விடும் என்பது உறுதியாக தெரியும் நிலையில் எதற்காக நாம் இண்டியா கூட்டணியில் நீடிக்கவேண்டும்?… என்ற எண்ணம் அக்கட்சிகளுக்கு இயல்பாகவே ஏற்படும். அதனால் அந்தந்த மாநிலங்களில் உள்ள இண்டியா கூட்டணி கட்சிகள் அவர்கள் விரும்பும் மாற்று கூட்டணியை தேடிச் செல்வதற்கான வாய்ப்புகளே உருவாகும்.
இதுபோன்றதொரு நிலை ஏற்பட்டால் வட மாநிலங்களில் பாஜகவுக்கும், தமிழகத்தில் அதிமுகவுக்கும் வெற்றி வாய்ப்பு அதிகரிக்கும் என்பது எதார்த்தம். மோடி ஹாட்ரிக் சாதனையுடன் பிரதமர் ஆவார் என்பதிலும் எந்த சந்தேகமும் இல்லை” என்று அந்த அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
மாநிலத் தேர்தல்களில் இந்தியா கூட்டணியில் விரிசல் என்பது உறுதியாகிவிட்டது.
அது நாடாளுமன்றத் தேர்தலிலும் எதிரொலிக்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!