தமிழக காவல்துறையில் பல்வேறு பதவிகளை வகித்த சஞ்சய் அரோரா டெல்லி கமிஷ்னராக நியமனம் : மத்திய உள்துறை அறிவிப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
31 July 2022, 3:36 pm

டெல்லியின் புதிய காவல் ஆணையாளராக சஞ்சய் அரோரா நியமனம் செய்யப்பட்டு உள்ளார். ஐ.பி.எஸ். அதிகாரி ராகேஷ் ஆஸ்தானாவுக்கு பதிலாக அந்த பணியில் வருகிற திங்கட்கிழமை அவர் இணைய உள்ளார்.

தமிழகத்தில் இருந்து 1988ம் ஆண்டு ஐ.பி.எஸ். அதிகாரியாக பணியில் சேர்ந்த அவர், தமிழக போலீசின் பல்வேறு பதவிகளை வகித்தவர். சிறப்பு அதிரடி படை போலீஸ் சூப்பிரெண்டாக, சந்தனகடத்தல் மன்னன் வீரப்பனை பிடிக்கும் பணியில் சிறப்புடன் செயல்பட்டதற்காக முதல்-அமைச்சரின் வீரதீர செயலுக்கான விருதும் பெற்றுள்ளார்.

தேசிய பாதுகாப்பு பணியில் பயிற்சி பெற்ற பின்னர் 1991ம் ஆண்டு சிறப்பு பாதுகாப்பு படை அமைப்பதில் முக்கிய பங்காற்றியவர். எல்.டி.டி.இ. செயல்பாடுகள் நிறைந்த காலத்தில் முதல்-அமைச்சர் பாதுகாப்பு பணியில் இந்த சிறப்பு பாதுகாப்பு படை செயல்பட்டது.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் போலீஸ் சூப்பிரெண்டாகவும் பணியாற்றிய அனுபவம் வாய்ந்தவர். கோவை நகர காவல் ஆணையாளராக 2002ம் ஆண்டு முதல் 2004ம் ஆண்டு வரை பணியாற்றி உள்ளார்.

விழுப்புரம் சரக டி.ஐ.ஜி.யாகவும், ஊழல் கண்காணிப்பு மற்றும் ஒழிப்பு துணை இயக்குனராகவும் அவர் பணிபுரிந்து உள்ளார். கடந்த 2021ம் ஆண்டு ஆகஸ்டு 31ந்தேதி இந்தோ-திபெத் எல்லை காவல் படையின் டி.ஜி.யாக பதவியேற்ற அவர், ஜனாதிபதியின் காவல் துறை பதக்கம், ஐ.நா. அமைதி குழு பதக்கம் உள்ளிட்ட பல பதக்கங்களையும் பெற்றுள்ளார்.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ