தெலங்கானாவில் அமைச்சராக பதவியேற்ற சீதாக்கா… மைதானம் முழுக்க எழுந்த ஒரே முழக்கம் : யார் இவர்?
Author: Udayachandran RadhaKrishnan7 December 2023, 7:59 pm
தெலங்கானாவில் அமைச்சராக பதவியேற்ற சீதாக்கா… மைதானம் முழுக்க எழுந்த ஒரே முழக்கம் : யார் இவர்?
தெலுங்கானாவில் காங்கிரஸ் வென்றதைத் தொடர்ந்து ரேவந்த் ரெட்டி இன்று முதல்வராக பதவி ஏற்றார். ரேவந்த் ரெட்டி அமைச்சரவையில் சீதாக்காவும் இடம் பெற்றார். ஹைதராபாத் எல்.பி. ஸ்டேடியத்தில் இன்று பதவியேற்பு விழா நடைபெற்றது. மூத்த காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் இந்த விழாவில் பங்கேற்றனர்.
அமைச்சர்கள் பதவியேற்கும் போது சீதாக்கா பெயரை அறிவித்ததுதான் தாமதம். ஒட்டுமொத்த ஸ்டேடியமே அதிர அதிர முழக்கங்கள் விண்ணைப் பிளந்தன. மைக் முன்னர் நின்ற சீதாக்கா பிரமாணத்தை வாசிக்க முடியாத அளவு முழக்கங்கள் தொடர்ந்தன. அதுவரை இறுக்கமாக இருந்த ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் அப்போதுதான் சிரித்தார். அவர் சிரித்தபடி சீதாக்காவை பதவி பிரமாணத்தை வாசிக்குமாறு கேட்டுக் கொண்டார். இதனையடுத்து முழக்கங்கள் தொடர சீதாக்காவும் அமைச்சராகப் பதவியேற்றார். அவருக்கு முதல்வர் ரேவந்த் ரெட்டி, மல்லிகார்ஜூன கார்கே, சோனியா, ராகுல், பிரியங்கா உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.
தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளவர். தெலுங்கானா புதிய அமைச்சரவையில் கவனம் பெற்றிருப்பவர் சீதாக்கா. 1971-ம் ஆண்டு பிறந்த சீதாக்கா (தன்சாரி அனசூயா) கோயா பழங்குடி வகுப்பைச் சேர்ந்தவர். தமது 14 வயதில் ஜனசக்தி நக்சல் இயக்கத்தில் ஆயுதம் ஏந்திய போராளியானவர். 11 ஆண்டுகள் நக்சலைட்- மாவோயிஸ்டாக ஆயுதப் போராட்டத்தில் இணைந்திருந்த சீதாக்கா, 1994 காலகட்டத்தில் ஆயுதப் போராட்டத்தில் இருந்து விலகினார். 1997-ல் பொது மன்னிப்பு பெற்ற சீதாக்கா, சட்டப்படிப்பை முடித்து வழக்கறிஞரானார். 2022-ல் “அரசியல் அறிவியலில்’ முனைவர் பட்டம் பெற்றார் சீதாக்கா.
2004-ம் ஆண்டு தெலுங்குதேசம் கட்சியில் இணைந்து ஜனநாயக அரசியலில் பயணிக்க தொடங்கினார். 2004 தேர்தலில் முலுக் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார். ஆனால் 2009-ம் ஆண்டு தேர்தலில் அதே தொகுதியில் போட்டியிட்டு முதல் முறை எம்.எல்.ஏ.வானார்.
2014 தேர்தலில் பிஆர்எஸ் வேட்பாளரிடம் தோல்வியைத் தழுவினார் சீதாக்கா. 2017-ல் தெலுங்குதேசம் கட்சியில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்தார். அகில இந்திய மகளிர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பதவியும் சீதாக்காவை தேடி வந்தது.
2018, 2023 தேர்தல்களில் முலுக் தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வானார். கொரோனா லாக்டவுன் காலத்தில் தெலுங்கானா- சத்தீஸ்கர் எல்லையில் 400 கிராமங்களுக்கு பயணித்து நிவாரணப் பொருட்களை தலை சுமையாக கொண்டு சேர்த்தார். இதனால் சீதாக்கா அப்போது மக்களால் கொண்டாடப்பட்டார்.