ஹாட்ரிக் அடித்த சீதாராம் யெச்சூரி : 3வது முறையாக சிபிஎம் பொதுச்செயலாளராக மீண்டும் தேர்வு.. அரசியல் தலைவர்கள் வாழ்த்து!!
Author: Udayachandran RadhaKrishnan10 April 2022, 5:19 pm
சிபிஎம் கட்சியை தொடர்ந்து மூன்றாவது முறையாக வழிநடத்தும் முக்கிய பொறுப்பு சீதாராம் யெச்சூரிக்கு வழங்கப்பட்டுள்ளது.
கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இங்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பினராயி விஜயன் முதல்வராக உள்ளார்.
இந்த நிலையில் கேரளா கண்ணூரில் சிபிஐ (எம்) 23வது அகில இந்திய மாநாடு நடைபெற்று வருகிறது. இன்றைய மாநாட்டின்போது கட்சி நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். சீதாராம் யெச்சூரி கட்சியின் பொதுச்செயலாளராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். ஏற்கனவே 2 முறை கட்சியின் பொதுச்செயலாளராக செயல்பட்ட சீதாராம் யெச்சூரி தற்போது தொடர்ச்சியாக 3வது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மேலும் அரசியல் தலைமை குழு உறுப்பினர்கள், மத்திய உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அரசியல் தலைமை குழு உறுப்பினர்களின் விபரம் வருமாறு: சீதாராம் யெச்சூரி(பொதுச்செயலாளர்), பிரகாஷ் காரத், பினராயி விஜயன், கொடியேரி பாலகிருஷ்ணன், பிருந்தா காரத், மாணிக் சர்க்கார், முகமது சலீம், பி.வி.ராகவலு, சூர்ய காந்த் மிஸ்ரா, தபன் சென், நிலோத்பால் பாசு, எம்ஏ பேபி, ஜி ராமகிருஷ்ணன், சுபாஷினி அலி, ராமச்சந்திர தோம், அசோக் தவாலே, ஏ.விஜயராகவன் ஆகியோர் உள்ளனர்.