சென்னை வந்த சோனியா காந்திக்கு உற்சாக வரவேற்பு.. காங்கிரஸ் நிர்வாகிகளுடன் இன்று சந்திப்பு ; திமுகவுக்கு நெருக்கடி கொடுக்க திட்டமா..?

Author: Babu Lakshmanan
14 October 2023, 8:37 am

சென்னை வந்துள்ள சோனியா காந்தியுடன் தமிழக காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் இன்று சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளனர்

மறைந்த முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி திமுகவில் உள்ள ஒவ்வொரு அணி சார்பிலும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், திமுக மகளிர் அணி சார்பில் மகளிர் உரிமை மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இன்று மாலை 4.30 மணிக்கு நடைபெற உள்ள இந்த மாநாட்டில், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியாகாந்தி, அவரது மகளும், பொதுச்செயலாளருமான பிரியங்காகாந்தி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக அழைக்கப்பட்டனர்.

இந்த அழைப்பை ஏற்று மாநாட்டில் பங்கேற்க நேற்று இரவு சோனியா காந்தி, பிரியங்கா காந்தி சென்னை வந்தனர். 5 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகம் வந்த அவரை, சென்னை விமான நிலையத்தில் முதலமைச்சர்ஸ்டாலின், அமைச்சர்கள், திமுக எம்.பி கனிமொழி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி மற்றும் காங்கிரஸ் எம்பி எம்எல்ஏக்கள் திரண்டு நின்று வரவேற்றனர்.

இந்த நிலையில், சோனியா காந்தியுடன் தமிழக காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் இன்று சந்தித்து ஆலோசனை நடத்துகின்றனர். இந்த சந்திப்பின் போது, நாடாளுமன்ற தேர்தல் நடவடிக்கைகள் மற்றும் திமுகவுடன் இடப்பங்கீடு மேற்கொள்வது தொடர்பாக ஆலோசிக்கப்படும் என தெரிகிறது.

ஏற்கனவே, கடந்த முறை போட்டியிட்ட 9 தொகுதிகள் அல்லது அதற்கு மேலான தொகுதிகளை கேட்டுப் பெற தமிழக காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. எனவே, இந்த விவகாரத்தில் திமுகவுக்கு நெருக்கடி கொடுக்க முடிவு செய்யப்படும் என தெரிகிறது.

  • ajith kumar receive padma bhushan award from president நீங்க வேற மாதிரி சார்…நாட்டின் உயரிய விருதை பெற்றுக்கொண்டார் அஜித்!