தேர்தல் நேரத்தில் சிக்கிய சோனியா, ராகுல்… ரூ.752 கோடி பறிமுதல் : அமலாக்கத்துறை அதிரடி ஆக்ஷன்.. ஆடிப் போன காங்கிரஸ்!!!
Author: Udayachandran RadhaKrishnan21 November 2023, 9:02 pm
தேர்தல் நேரத்தில் சிக்கிய சோனியா, ராகுல்… ரூ.752 கோடி பறிமுதல் : அமலாக்கத்துறை அதிரடி ஆக்ஷன்.. ஆடிப் போன காங்கிரஸ்!!!
நேஷனல் ஹெரால்டு தொடர்புடைய பண மோசடி வழக்கில், அசோசியேட்டட் ஜர்னல்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் ரூ.661.69 கோடி மதிப்புள்ள சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. யங் இந்தியன் நிறுவனம் தொடர்புடைய ரூபாய் 90.21 கோடி மதிப்புள்ள சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
அமலாக்கத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “PMLA, 2002 இன் கீழ் விசாரிக்கப்பட்ட பணமோசடி வழக்கில் 751.9 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை தற்காலிகமாகப் பறிமுதல் செய்ய ED உத்தரவு பிறப்பித்துள்ளது. அசோசியேட்டட் ஜர்னல்ஸ் லிமிடெட் (AJL) மோசடியாக பெறப்பட்ட வருமானத்தை வைத்திருப்பது விசாரணையில் தெரியவந்தது. இந்தியாவின் டெல்லி, மும்பை மற்றும் லக்னோ போன்ற நகரங்களில் 661.69 கோடி ரூபாய் வரை பரவியுள்ள அசையாச் சொத்துக்கள், யங் இந்தியன் (ஒய்ஐ) 90.21 ரூபாய் அளவிலான சொத்துகள் பறிமுதல் செய்யப்படுகிறது.” என்று கூறப்பட்டுள்ளது.
நேஷனல் ஹெரால்டு என்பது முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவால் தொடங்கப்பட்ட நாளிதழ். 1937ஆம் ஆண்டு அசோசியேட்டட் ஜர்னல்ஸ் லிமிடெட் (AJL) என்னும் நிறுவனத்தைத் தொடங்கிய நேரு, 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுதந்திரப் போராட்ட வீரர்களை அதில் பங்குதாரர் ஆக்கினார். இந்நிறுவனம் எந்தவொரு குறிப்பிட்ட நபருக்கும் சொந்தமானது அல்ல எனவும் தெரிவிக்கப்பட்டது.
1942-ம் நேஷனல் ஹெரால்டு பத்திரிகைக்குத் தடை விதிக்கப்பட்ட நிலையில், 3 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வெளியாகத் தொடங்கியது. நிதி நெருக்கடி காரணமாக 2008ஆம் ஆண்டு நேஷனல் ஹெரால்டு பத்திரிகையின் பிரசுரம் நிறுத்தப்பட்ட நிலையில், 2016-ம் ஆண்டு டிஜிட்டல் வடிவத்தில் மீண்டும் தொடங்கப்பட்டது.
கடந்த 2012ஆம் ஆண்டு பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சாமி, நேஷனல் ஹெரால்டு பத்திரிகையின் சொத்துகள் சட்டவிரோதமாக கைப்பற்றப்பட்டதாக, டெல்லியில் உள்ள விசாரணை நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
அதில், 2008-ம் ஆண்டு நேஷனல் ஹெரால்டு பத்திரிகை மூடப்பட்ட போது, AJL நிறுவனத்திற்கு காங்கிரஸில் 90 கோடி ரூபாய் கடன் நிலுவை இருந்ததாகவும், பின்னர் 2010-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சி இந்த கடனை யங் இந்தியா லிமிடெட் (YIL) என்ற நிறுவனத்திடம் வழங்கியதாகவும் சுப்ரமணியன் சுவாமி மனுவில் கூறியிருந்தார்.
வருமான வரிச் சட்டத்தின் கீழ் எந்த அரசியல் அமைப்பும், மூன்றாம் தரப்பினருடன் நிதி பரிவர்த்தனை செய்ய முடியாது எனக் கூறிய சுப்ரமணியன் சுவாமி, வெறும் ரூ.50 லட்சம் ரூபாய் மட்டும் திருப்பிச் செலுத்தி, யங் இந்தியா நிறுவனம் முறைகேடாக AJL நிறுவனத்தையும், அதற்குச் சொந்தமான ரூ.2,000 கோடி ரூபாய் சொத்துகளைக் கைப்பற்றியதாக சுப்ரமணியன் சுவாமி குற்றம்சாட்டினார்.
யங் இந்தியா நிறுவனத்தில் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் தலா 38% பங்குகளை வைத்துள்ளனர். மீதமுள்ள 24% பங்கு காங்கிரஸ் தலைவர்கள் மோதிலால் வோரா மற்றும் ஆஸ்கார் பெர்னாண்டஸ், பத்திரிகையாளர் சுமன் துபே ஆகியோரிடம் உள்ளன.
இந்த நிறுவனம் முற்றிலும் அறக்கட்டளையாக தொடங்கப்பட்டது எனக் கூறி, நேஷனல் ஹெரால்டு வழக்கில் முன் வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை காங்கிரஸ் கட்சி மறுத்து வருகிறது.
இந்த வழக்கில் ஜூன் 2014ஆம் ஆண்டு ராகுல் காந்தி, சோனியா காந்தி உட்பட இவ்வவழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவருக்கும் டெல்லி நீதிமன்றம் சம்மன் அனுப்பியது. 2015-ம் ஆண்டு இவ்வழக்கில் சோனியா காந்தி, ராகுல்காந்தி இருவருக்கும் ஜாமீன் வழங்கப்பட்டது.
மேலும், இந்த வழக்கில் ராகுல் காந்தி, சோனியா காந்திக்கு எதிரான நடவடிக்கைகளை ரத்து செய்ய உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது. பின்னர், 2019ஆம் ஆண்டு நேஷனல் ஹெரால்டுக்கு சொந்தமான சுமார் 16 கோடி ரூபாய் மதிப்புடைய சொத்துகளை அமலாக்கத்துறை பறிமுதல் செய்தது.
இந்நிலையில் நேஷனல் ஹெரால்டு தொடர்புடைய பண மோசடி வழக்கில் ரூ.752 கோடி சொத்துகளை அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.