வாக்குச்சாவடிக்குள் நுழைய முயன்ற சோனு சூட் தடுத்து நிறுத்தம்: காரை பறிமுதல் செய்த போலீசார்…!!

Author: Rajesh
20 February 2022, 5:07 pm

சண்டிகர்: பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தல் இன்று நடைபெற்று வரும் நிலையில் வாக்குச்சாவடிக்குள் நுழைய முயன்ற நடிகர் சோனு சூட்டின் கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தல் இன்று ஒரே கட்டமாக 117 தொகுதிகளுக்கு இன்று நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு தொடங்கி வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இந்த தொகுதிகளில் 1,304 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 2.15 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

24,689 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் 2,952 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக அறிவிக்கப்பட்டுள்ளது. பஞ்சாப் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளும் காங்கிரஸ், சிரோமணி அகாலி தளம், பாஜக கூட்டணி, ஆம் ஆத்மி இடையே கடும் போட்டி நிலவுகிறது.

இதில், பாலிவுட் நடிகர் சோனு சூட்டின் சகோதரி மாளவிகா சூத் மோகா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடுகிறார். இந்த ஆண்டு ஜனவரி 10ம் தேதி காங்கிரஸில் இணைந்தார். இந்நிலையில் மோகா மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடிக்குள் நுழைய முயன்ற சோனு சூட்டின் காரை பஞ்சாப் போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். பின்னர் அவரை தடுத்து நிறுத்தி வீட்டிற்கு அனுப்பினர்.

இதுகுறித்து நடிகர் சோனு சூட் கூறுகையில், அகாலிதளம் உள்பட எதிர்கட்சிகளிடம் இருந்து பல்வேறு வாக்குச்சாவடிகளுக்கு மிரட்டல் வந்துள்ளது. சில வாக்குச்சாவடிகளில் பணம் விநியோகிக்கப்படுவதாகவும் தகவல் தெரிந்தது. சோதனை செய்து நியாயமான தேர்தலை நடத்துவது எங்கள் கடமை. அதனால்தான் நாங்கள் வெளியே சென்றோம் எனக் கூறினார்.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ