பாஜகவுடன் நெருக்கம் காட்டும் தென்மாநில கட்சிகள்… அடிக்கடி டெல்லி செல்லும் முக்கிய பிரமுகர்கள் : தே.ஜ கூட்டணியில் பரபரப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
31 August 2022, 5:06 pm

பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில், சந்திரபாபுவின் தெலுங்கு தேசம் கட்சி நீண்ட நாட்களாக அங்கம் வகித்து வந்தது. ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என அக்கட்சி வலியுறுத்தியது.

ஆனால், அது ஏற்கப்படாத நிலையில், கடந்த 2019ம் ஆண்டு தேர்தலுக்கு முன்னர், வாக்குறுதிகளை பா.ஜ., நிறைவேற்றவில்லை எனக்கூறி சந்திரபாபு நாயுடு கூட்டணியை முறித்தார்.

இதற்கு பிறகு நடந்த லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தலில் தெலுங்கு தேசம் படுதோல்வியை தழுவியது. ஜெகன்மோகன்ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்தது. ஆளுங்கட்சியின் நடவடிக்கைகளால் சந்திரபாபுவுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இச்சூழ்நிலையில், இம்மாத துவக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடியை, சந்திரபாபு நாயுடு சந்தித்து பேசினார். இதனையடுத்து சந்திரபாபு நாயுடு, மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணியில் மீண்டும் இணைய போகிறார் என்ற தகவல் அரசியல் வட்டாரத்தில் உலா வந்தது.

ஆனால், இதனை மறுத்துள்ள பா.ஜ., மேலிட இணை பொறுப்பாளர் சுனில் தியோதர் கூறியதாவது: தேசிய ஜனநாயக கூட்டணியில் தெலுங்கு தேசம் மீண்டும் இணைய போவதாக வெளியான தகவல் உண்மையில்லை.

அவ்வாறு எந்த முடிவையும் பா.ஜ., மேலிடம் எடுக்கவில்லை. மேலிட கூட்டமும் நடக்கவில்லை. இந்த செய்தி உண்மையாக எந்த வாய்ப்பும் இல்லை.

பிரதமர் மோடி- சந்திரபாபு இடையிலான சந்திப்பு சாதாரணமானது. அதனை அரசியல் கண்ணோட்டத்துடன் பார்க்க வேண்டாம். அரசியலை ஒதுக்கி வைத்துவிட்டு, தேசிய அளவிலான திட்டங்களுக்கு அனைவரும் ஒன்று சேர வேண்டும் என்பது மோடியின் எண்ணம். சந்திரபாபுவை மோடி பார்த்த நிகழ்ச்சியில் ஏராளமானோரையும் பார்த்துள்ளார்.

ஜெகன்மோகன் ரெட்டியும் அடிக்கடி டில்லி சென்று வருகிறார். அதற்காக அக்கட்சியுடன் கூட்டணி வைக்கும் எண்ணம் எல்லாம் இல்லை. இந்த வழக்கமான சந்திப்புகளை அரசியல் கண்ணோட்டத்தோடு பார்க்கக்கூடாது.

இரு கட்சிகளிலும் வாரிசு அரசியல் நிறைந்துள்ளது. ஊழல் கட்சிகள். ஆந்திராவில் சொந்தக்காலில் நிற்க வேண்டும் என மேலிடம் வலியுறுத்தி உள்ளது. அதில் நாங்கள் தீவிர கவனம் செலுத்து வருகிறோம். இவ்வாறு சுனில் தியோதர் கூறினார்.

  • Nithya Menon Rejects Marriage Want to single திருமணத்தை வெறுத்து ஒதுக்கும் பிரபல நடிகை.. 36 வயதாகும் முரட்டு சிங்கிள்…!!