ரயிலுக்கு தீ வைத்து போராட்டம் : அக்னிபாத் திட்டத்தில் சேர விண்ணப்பித்த இளைஞர்கள் திடீர் எதிர்ப்பு.. கட்டுப்படுத்த முடியாமல் திணறிய போலீஸ்!!

Author: Udayachandran RadhaKrishnan
17 June 2022, 4:42 pm

மத்திய அரசின் அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து செகந்திராபாத் ரயில்வே நிலையத்தில் தீ வைத்த போராட்டக்காரர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தற்காலிக அடிப்படையில் இளைஞர்களை ராணுவத்தில் சேர்க்கும் மத்திய அரசின் அக்னிபாத் திட்ட முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு சில மாநிலங்களில் கடும் போராட்டம் தலைதூக்கி உள்ளது.

இந்த நிலையில் தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத்தில் உள்ள ரயில் நிலையத்திற்கு இன்று காலை வந்த போராட்டக்காரர்கள் வாகனங்களுடன் உள்ளே வந்து அவற்றை ரயில் பாதைகளில் நிறுத்தி ரயில் போக்குவரத்து தடை ஏற்படுத்தினர்.

பின்னர் அங்கு நிறுத்தப்பட்டிருந்த ரயிலுக்கு தீ வைத்த ஆர்ப்பாட்டக்காரர்கள் கற்கள், கட்டைகள் ஆகியவற்றால் ரயில் நிலையம் மீது கடும் தாக்குதல் நடத்தினர். இதனால் அங்கு வந்து இருந்த பயணிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

இந்த நிலை தற்போதும் தொடர்கிறது. போராட்டத்தை கட்டுப்படுத்த குறைந்த எண்ணிக்கையில் உள்ள ரயில்வே போலீசாரால் முடியவில்லை. எனவே சட்டம் ஒழுங்கு காவல் துறையினர் அங்கு தற்போது குவிக்கப்பட்டுள்ளனர்.

ஆனால் தங்களுடைய போராட்டம் தொடரும் என்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆர்ப்பாட்டக்காரர்கள் கூறுகின்றனர். போலீசார் எண்ணிக்கையைவிட போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது. எனவே நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர போலீசார் கடும் முயற்சி எடுக்க வேண்டிய நிலை தற்போது நிலவுகிறது.

மேலும் போராட்டத்தில் ஈடுபட்டு ரயில் நிலையத்திற்கு தீ வைத்தவர்கள் ராணுவத்தில் வேலைக்குச் சேர விருப்பமுள்ள இளைஞர்கள் என்று தெரியவந்துள்ளது மேலும் அக்னிபாத் திட்டத்தை ரத்து செய்து இதற்கு முன் நடைமுறையில் இருந்த வழக்கத்தின் படி ராணுவத்திற்கு ஆட்களை சேர்க்க வேண்டும் என்பது அவருடைய கோரிக்கையாக உள்ளது.

  • ajith fans criticize ilaiyaraaja in strong words for giving notice to good bad ugly “இளையராஜா ஒரு பண பைத்தியம்”… தானாக ஆஜர் ஆகி அடிவாங்கும் அஜித் ரசிகர்கள்! ஏன் இப்படி?