வாக்குச் சீட்டு முறை வழக்கில் திடீர் திருப்பம்.. தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!
Author: Udayachandran RadhaKrishnan24 April 2024, 1:37 pm
வாக்குச் சீட்டு முறை வழக்கில் திடீர் திருப்பம்.. தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!
மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மீது எதிர்க்கட்சிகள் தொடர்ந்து பல்வேறு சந்தேகங்களை எழுப்பி வருகின்றன.எந்த பட்டனை அழுத்தினாலும் குறிப்பிட்ட சின்னத்துக்கு வாக்குகள் செல்லும் வகையில் எந்திரத்தை மாற்றி அமைக்க இயலும் என பல்வேறு குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்படுகிறது.
ஆனால் தேர்தல் ஆணையம் இந்த குற்றச்சாட்டை தொடர்ந்து மறுத்து வருகிறது. இதற்கிடையே தேர்தல் மீது மக்களின் நம்பிக்கையை அதிகரிக்க மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் பதிவாகும் வாக்குகளையும், ஒப்புகை சீட்டையும் முழுமையாக எண்ணி ஒப்பீடு செய்ய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட கோரி ஜனநாயக சீர்திருத்தத்துக்கான சங்கம் என்ற தன்னர்வ அமைப்பு உச்சநீதிமன்ற்த்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை கடந்த 18ம் தேதி விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, தீபாங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பை ஒத்திவைத்தது.
வாக்கு எந்திரங்களுடன், 100 சதவீத ஒப்புகை சீட்டை சரி பார்க்க கோரிய விவிபேட் வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் விவிபேட் தொடர்பான வழக்கில் சில கேள்விகள் இருப்பதாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் இன்று காலை கருத்து தெரிவித்துள்ளனர்.
மைக்ரோ கண்ட்ரோலர் கருவி கண்ட்ரோலிங் யூனிட்டில் உள்ளதா? அல்லது விவிபேட்டில் உள்ளதா? மைக்ரோ கண்ட்ரோலர் கருவி ஒருமுறை மட்டுமே மென்பொருளை பதிவேற்றம் செய்யக் கூடியதா? என்று நீதிபதிகள் கேள்விகளை எழுப்பினர்.
தங்கள் கேள்விகளுக்கான விளக்கத்தை அளிக்க தேர்தல் ஆணைய அதிகாரி பிற்பகல் 2 மணிக்கு ஆஜராக சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. அதை தொடர்ந்து இந்த வழக்கில் தீர்ப்பு அளிக்கப்படும்.