சிறுநீரகம் தானம் செய்தால் ₹30 லட்சம் தருவதாக கூறி அறுவை சிகிச்சை : இளைஞரை ஏமாற்றிய கும்பல்..!

Author: Udayachandran RadhaKrishnan
10 July 2024, 6:24 pm

ஆந்திர மாநிலம் குண்டூரைச் சேர்ந்த மதுபாபு ( 31 ) ஆட்டோ ஓட்டு பிழைப்பு நடத்தி வருகிறார். இவரது பெற்றோர் இறந்த நிலையில் திருமணம் ஆகி 4 வயதில் குழந்தை உள்ளது.

மதுபாபு குடும்பம் நடத்த சிறு வியாபாரம் செய்து நஷ்டம் ஏற்பட்ட நிலையில் கொரோனாவால் நிதிச்சுமை ஏற்பட்ட ஆன்லைன் செயலி மூலம் கடன் பெற்றார்.

இந்நிலையில் ஆட்டோ ஓட்டியபடி குடும்பம் நடத்துவதோடு கடனை அடைக்க முடியாததால் முகநூல் மூலம் பாஷா என்பவர் அறிமுகமாகி சிறுநீரகம் தானமாக வழங்கினால் ₹30 லட்சம் தருவதாக கூறியதை கேட்டு குடும்பத்தில் உள்ள கஷ்டத்தை போக்க இதுவே தான் தீர்வு என முடிவு செய்த மதுபாபு சம்மதம் தெரிவித்தார்.

பாஷா மூலம் இடைத்தரகர் வெங்கட் அறிமுகம் ஆனார். வெங்கட் கிருஷ்ணா மாவட்டம், பந்துமில்லி மண்டலம், கஞ்சடம் கிராமத்தைச் சேர்ந்த வெண்டசாமி என்பவருக்கு சிறுநீரகம் தேவை அவருக்கு கிட்னி கொடுத்தால் ₹30 லட்சம் தருவதாகவும் வெங்கட் கூறினார்.

இறுதியாக நோயாளியின் மைத்துனர் சுப்ரமணியம் அறிமுகம் செய்து வைக்கப்பட்ட விஜயவாடாவில் உள்ள மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.

எல்லாம் பொருத்தமாக இருந்ததால் முதலில் முன்பணமாக ₹.59,000 கொடுத்தனர். இதனால் மதுபாபு அறுவை சிகிச்சைக்கு தயாராக இருந்தார். ஆனால் சிறுநீரகம் தானம் செய்ய வேண்டுமானால் நெருங்கிய உறவினராக இருக்க வேண்டும்.

அதன்படி மதுபாபு ஆதார் அட்டையை நோயாளியின் சொந்த ஊரில் இருப்பது போன்று முகவரி மாற்றம் செய்தனர். பின்னர் இடது சிறுநீரகம் எடுப்பதாக கூறி கையெழுத்து வாங்கப்பட்டது.

ஜூன் 15ம் தேதி அறுவை சிகிச்சை செய்யப்பட்டு வலது சிறுநீரகம் அகற்றப்பட்டது. அந்த சிறுநீரகம் வெங்கடசாமிக்கு மாற்றப்பட்டது. அதன்பின், ஒப்பந்தப்படி ₹30 லட்சம் வழங்க வேண்டும் என மதுபாபு கேட்டுள்ளார்.

இதனால் பல கட்டமாக ₹50 ஆயிரம் கொடுத்தனர். அதன்பிறகு நோயாளியின் உறவினர் சுப்ரமணியம், இடைத்தரகர் வெங்கட், மருத்துவர் சரத்பாபு ஆகியோர் மிகவும் அலட்சியமாக பதில் அளித்ததோடு சிறுநீரகத்தை எடுத்த எங்களுக்கு உயிரை எடுப்பது பெரிய விஷயமில்லை என்று மிரட்டினார்கள்.

இதனால் ஒன்றும் செய்ய முடியாமல் மீண்டும் குண்டூரை சென்றார். குண்டூரில் மாவட்ட எஸ்பி அலுவலகத்துக்குச் சென்று தனக்கு இழைக்கப்பட்ட அநீதி குறித்து புகார் அளித்தார்.

இதில் இடைத்தரகர் பாஷாவுடன் சேர்ந்து டாக்டர் சரத்பாபு மீது புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இதுகுறித்து மதுபாபு கூறுகையில் எனது குடும்ப சூழல் காரணமாக சிறுநீரகத்தை விற்க முடிவு செய்தேன். ஆனால் என்னை ஏமாற்றி 30 லட்சம் தருவதாக கூறி பல தவணைகளில் ஒரு லட்ச வரை கொடுத்து விட்டு தற்பொழுது என்ன செய்ய முடியும் உன்னால் உறவினர் முறையிலேயே நீ சிறுநீரகம் தானம் செய்தாய் சட்டப்படி உன்னால் எதுவும் செய்ய முடியாது அதிகம் பேசினால் கொலை செய்து விடுவதாக மிரட்டுகிறார்கள்.

என்னைப் போன்று பலர் மாதத்திற்கு 10 பேர் ஏமாற்றப்பட்டு சிறுநீரகம் எடுக்கப்படுகிறது இதனை அரசு தடுத்து நிறுத்தி தனக்கு உரிய நியாயம் செய்ய வேண்டும்.

நான் எத்தனை நாட்கள் உயிருடன் இருப்பேன் என்று தெரியவில்லை எனது மனைவி குழந்தையை காப்பாற்ற அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

இது குறித்து உள்துறை அமைச்சர் அனிதா தனது எக்ஸ் பக்கத்தில் சிறுநீரக மோசடி குறித்து பாதிக்கப்பட்டவரின் புகாரை கேட்டறிந்தேன். இது தொடர்பாக இந்த மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

வருங்காலத்தில் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க போலீசார் நடவடிக்கை எடுப்பார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

  • Pushpa 2 vs Mufasa collection புஷ்பா2-க்கே பயம் காட்டிய முஃபாஸா…வசூலில் முரட்டு சாதனை..!
  • Views: - 291

    0

    0