தோல்விக்கு பொறுப்பேற்பு? ஆறே மாதத்தில் அரசியலில் இருந்து விலகிய விகே பாண்டியன்!

Author: Udayachandran RadhaKrishnan
9 June 2024, 4:56 pm
VK Pa
Quick Share

ஒடிசா மாநிலத்தில் பாராளுமன்ற தேர்தலுடன், சட்டசபை தேர்தலும் நடைபெற்றது. அங்கு இரு தேர்தலிலும் பிஜு ஜனதா தளம் கட்சி படுதோல்வி அடைந்தது. சட்டசபை மற்றும் பாராளுமன்ற தேர்தல்களில் பா.ஜ.க. அபார வெற்றி பெற்றது.

இதற்கிடையே, நவீன் பட்நாயக்கின் அரசியல் வாரிசு வி.கே.பாண்டியன் என அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வந்தது. இந்நிலையில், வி.கே.பாண்டியன் எனது அரசியல் வாரிசு இல்லை என்று இந்த சர்ச்சைகளுக்கு ஒடிசா மாநில முன்னாள் முதல் மந்திரி நவீன் பட்நாயக் முற்றுப்புள்ளி வைத்தார்.

மேலும் பேசிய அவர், “எனது அரசியல் வாரிசை ஒடிசா மக்கள் முடிவு செய்வார்கள். கடந்த 10 ஆண்டாக பல துறைகளில் வி.கே.பாண்டியன் சிறப்பாக பணியாற்றி உள்ளார். வி.கே.பாண்டியனை குறை சொல்வது துரதிர்ஷ்டவசமானது. நேர்மையும், உண்மையும் உள்ள மனிதர் வி.கே.பாண்டியன் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். வி.கே.பாண்டியன் கடும் உழைப்பாளி.கடந்த இரண்டு புயல் காலங்களிலும், கொரோனா காலத்திலும் அவர் செய்த சேவை மகத்தானது” என்று அவர் தெரிவித்திருந்தார். இதனையடுத்து, வி.கே. பாண்டியன் வீடியோ ஒன்றை இன்று வெளியிட்டுள்ளார்.

அதில், “நவீன் பட்நாயக்கிற்கு உதவவே நான் அரசியலுக்கு வந்தேன். பதவிக்காக அரசியலுக்கு வரவில்லை. பிஜு ஜனதா தளத்தின் தோல்விக்கு என்மீதான விமர்சனங்கள் காரணமாக இருந்திருந்தால் தொண்டர்கள் அனைவரிடம் மன்னிப்பு கோருகிறேன். தீவிர அரசியலில் இருந்து விலகுகிறேன்” என்று அவர் அறிவித்துள்ளார். ஒடிசா மாநில ஐ.ஏ.எஸ். அதிகாரியான தமிழகத்தைச் சேர்ந்த வி.கே.பாண்டியன், சமீபத்தில் அரசு பொறுப்பை உதறிவிட்டு நவீன் பட்நாயக் முன்னிலையில் பிஜு ஜனதா தளம் கட்சியில் சேர்ந்தார்.

மேலும் படிக்க: அங்கீகாரத்துக்கே அங்கீகாரம்… உங்க வாழ்த்துக்கு நன்றி : உச்சி குளிர்ந்த சீமான்..!!

ஒடிசா முன்னாள் முதலமைச்சர் நவீன் பட்நாயக்கிற்கு நெருக்கமான தலைவராக பிஜு ஜனதா தளம் கட்சியில் வி.கே.பாண்டியன் உருவெடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 130

0

0