காவிரி விவகாரத்தில் கர்நாடக அரசுக்கு செக் வைத்த தமிழக அரசு : உச்சநீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு!!!
Author: Udayachandran RadhaKrishnan21 August 2023, 11:47 am
காவிரி விவகாரத்தில் கர்நாடக அரசுக்கு செக் வைத்த தமிழக அரசு : உச்சநீதிமன்றம் போட்ட அவசர உத்தரவு!!!
காவிரி விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு அரசின் சார்பில் வக்கீல்கள் ஜி.உமாபதி, டி.குமணன் ஆகியோர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இது தொடர்பாக தாக்கல் செய்துள்ள மனுவில்,
‘ஆகஸ்டு மாதத்தின் எஞ்சியுள்ள நாட்களுக்கு தேவையான 24 ஆயிரம் கன அடி நீரை உடனடியாக திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும். செம்டம்பர் மாதம் திறந்துவிட வேண்டிய 36.76 டி.எம்.சி. நீரை கர்நாடக அரசு திறப்பதை உறுதி செய்ய வேண்டும்.
தமிழ்நாட்டுக்கு எஞ்சியிருக்கும் காலத்துக்கு மாதந்தோறும் திறந்துவிட வேண்டிய நீர் குறித்த உத்தரவுகளை முழுமையாக அமல்படுத்துவதை உறுதி செய்ய காவிரி நீர் மேலாண்மை ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த மனுவை அவசரமாக விசாரிக்க கோரி தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன் தமிழ்நாடு அரசின் சார்பில் மூத்த வக்கீல் முகுல் ரோத்தகி முறையிட்டார்.
அப்போது முறையீட்டு பட்டியலில் இல்லாததால், முறைப்படி பட்டியலில் இடம்பெற செய்ய இன்று மீண்டும் முறையிடுமாறு அறிவுறுத்தப்பட்டது. இதையடுத்து மனுவை அவசரமாக விசாரிக்க கோரி இன்று முறையிடப்பட்டது.
இதையடுத்து இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது காவிரி விவகாரம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள இன்றே புதிய அமர்வு அமைக்கப்படும் என சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. மேலும் கர்நாடக அரசு தன் தரப்பு வாதங்களை முன்வைக்க முயன்ற போது புதிய அமர்வில் வாதிட அறிவுறுத்தப்பட்டுள்ளது.