திருப்பதிக்கு பாதயாத்திரை சென்ற தமிழக பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு : அடிவாரத்தில் திடீர் தர்ணாவால் பரபரப்பு!!
Author: Udayachandran RadhaKrishnan24 January 2022, 11:09 am
திருப்பதி: வேலூரில் இருந்து திருப்பதி மலைக்கு பாதயாத்திரையாக வந்த சுமார் 300க்கும் மேற்பட்டபக்தர்களை திருப்பதி மலைக்கு செல்ல தேவஸ்தான நிர்வாகம் அனுமதி மறுத்துள்ளதால் தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர்.
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை சேர்ந்த பக்தர்கள் சுமார் 500 பேர் ஒரு குழுவாக இணைந்து கடந்த 25 ஆண்டுகளாக தங்கள் ஊரில் இருந்து புறப்பட்டு திருப்பதி மலைக்கு பாதயாத்திரையாக வந்து ஏழுமலையானை வழிபட்டு செல்வது வழக்கம்.
கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக தற்போது இலவச தரிசன டிக்கெட்டுகளும் ஆன்லைன் மூலம் தேவஸ்தானத்தால் வழங்கப்படுகிறது. குடியாத்தத்தை சேர்ந்த பக்தர்கள் குழுவில் சுமார் 150 பேருக்கு மட்டுமே இலவச தரிசன டிக்கெட்டுகள் கிடைத்த நிலையில் மற்றவர்களுக்கு டிக்கெட் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.
ஆனாலும் தாங்கள் திட்டமிட்டபடி குடியாத்தத்தில் இருந்து பாதயாத்திரையாக புறப்பட்ட 500 பக்தர்களும் இன்று காலை திருப்பதி மலையடிவாரத்தை அடைந்தனர.
ஆனால் அங்கு பணியில் இருந்த ஊழியர்கள் தரிசன டிக்கெட்டுகளை உடன் கொண்டு வந்திருக்கும் பக்தர்கள் மட்டுமே திருப்பதிமலை செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்று கூறி 350 பக்தர்களை தடுத்து நிறுத்தி விட்டனர்.
நாங்கள் கடந்த ஒரு மாத காலமாக மாலை போட்டு விரதம் இருந்து பாதயாத்திரையாக திருப்பதி மலைக்கு வந்திருக்கிறோம். எனவே எப்படியாவது எங்களை திருப்பதி மலைக்கு செல்ல அனுமதிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டனர்.
ஆனால் நிபந்தனைகளை காரணமாக டிக்கெட் இல்லாத பக்தர்கள் திருமலைக்கு செல்ல அனுமதிக்கப்படவில்லை. எனவே திருப்பதி மலை அடிவாரத்தில் பக்தர்கள் தர்ணா போராட்டம் நடத்தினர்.
அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய தேவஸ்தான விஜிலென்ஸ் துறையினர் தற்போது டிக்கெட் கொண்டுவந்திருக்கும் மக்கள் மட்டும் திருப்பதி மலை செல்லலாம் மற்றவர்களை திருப்பதி மலைக்கு அனுப்பி வைப்பது பற்றி உயர் அதிகாரிகளுடன் பேசி முடிவு செய்யப்படும் என்று தெரிவித்தனர்.
எனவே டிக்கெட் கொண்டு வந்திருந்த பக்தர்கள் திருப்பதிக்கு சென்று விட்ட நிலையில் மற்ற 350 பக்தர்கள் திருப்பதி மலை அடிவாரத்தில் காத்துக் கிடக்கின்றனர்.