தொடர்ந்து டார்ச்சர்… மருத்துவக் கல்லூரி மாணவி திடீர் தற்கொலை ; சக மாணவன் கைது.. போலீசார் விசாரணையில் பகீர்!!
Author: Babu Lakshmanan27 February 2023, 9:23 pm
தெலங்கானாவில் மருத்துவக் கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தெலங்கானா மாநிலம் வாரங்கால் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் மருத்துவ கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தவர் பிரீத்தி. இளநிலை மருத்துவரான இவர், கடந்த 22ம் தேதி தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். உடனடியாக மீட்கப்பட்ட அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
எனினும், சிகிச்சை பலனின்றி நேற்றிரவு அவர் உயிரிழந்த நிலையில், அவரது இறுதி சடங்கு இன்று நடைபெற்றது. மாணவியின் தற்கொலை குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
அதாவது, மருத்துவ மாணவியான பிரீத்தி கடைசியாக அவசர சிகிச்சை பரிவில் பணியில் இருந்ததாகவும், அப்போது, சக மருத்துவர்களிடம் தனக்கு தலை வலி மற்றும் வயிறு வலி ஏற்பட்டு உள்ளது என கூறி விட்டு தனது அறைக்கு புறப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
அதன்பின்பு, அவர் சுயநினைவற்ற நிலையில் காணப்பட்டுள்ளதாகவும், இந்த சம்பவத்தில், எம்.ஜே.எம். மருத்துவமனையின் 2-ம் ஆண்டு மருத்துவ மாணவர் கைது செய்யப்பட்டு உள்ளதாக கூறும் போலீசார், சமூக ஊடகம் மற்றும் அவர்கள் இருவருக்கு இடையேயான தனிப்பட்ட சாட்டிங்குகளை ஆய்வு செய்ததில், பிரீத்தி ராகிங் கொடுமைக்கு ஆளானது தெரிய வந்துள்ளதாக கூறுகின்றனர்.
இதனை தொடர்ந்து, அந்த மாணவர் மீது ராகிங்குக்கு எதிரான வழக்கும் பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதனிடையே, கடந்த சில நாட்களாக மூத்த ஆண் மருத்துவர் ஒருவரால் பிரீத்தி துன்புறுத்தப்பட்டு வந்ததாகவும், அதனாலேயே இந்த முடிவை அவர் எடுத்துள்ளதாகவும் பிரீத்தியின் தந்தை போலீசில் புகார் அளித்து உள்ளார். எனினும், பல்வேறு கோணங்களிலும் விசாரணை நடந்து வருகிறது என போலீசார் கூறியுள்ளனர்.
இதனிடையே, Justiceforpreethi எனும் ஹேஷ்டேக் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.