திருவனந்தபுரத்தில் காங்கிரஸ் – இடதுசாரி மாணவர் அமைப்பினர் இடையே பயங்கர மோதல்: பெண்ணின் மீது கொடூர தாக்குதல் நடத்தும் அதிர்ச்சி வீடியோ..!!
Author: Rajesh16 March 2022, 6:25 pm
திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் சட்டக் கல்லூரி KSU பிரிவுத் தலைவர் மற்றும் பிற KSU செயல்பாட்டாளர்கள் மீது SFI குண்டர்கள் நடத்திய தாக்குதலில் பெண் படுகாயமடைந்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் திருவனந்தபுரம் அரசு சட்டக்கல்லூரியில் யூனியன் தேர்தல் நடைபெற்றது. இதில், காங்கிரஸ் மற்றும் இடதுசாரி மாணவர் அமைப்புகள் பங்கேற்றனர்.
காங்கிரஸ் கட்சியின் மாணவர் அமைப்பான கேரள மாணவர் அமைப்பிற்கும், இடதுசாரி கட்சியின் மாணவர் அமைப்பான இந்திய மாணவர் கூட்டமைப்புக்கும் இடையே கடும் போட்டி ஏற்பட்டது. நடந்து முடிந்த தேர்தல் முடிவுகள் நேற்று வெளியான நிலையில் இரு கட்சியின் மாணவர் அமைப்பிற்கும் இடையே திடீரென மோதல் ஏற்பட்டது.
அப்போது, காங்கிரஸ் கட்சியின் மாணவர் அமைப்பான கேரள மாணவர் அமைப்பின் யூனியன் தலைவரான ஷபீனா யாக்கூப் என்ற பெண்ணை இடதுசாரி கட்சியின் மாணவர் அமைப்பான இந்திய மாணவர் கூட்டமைப்பை சேர்ந்த மாணவர்கள் சரமாரியாக தாக்கினர்.
பெண் என்றும் பாராமல் யாக்கூப்பை தரதரவென இழுத்து அவரை கடுமையாக தாக்கியுள்ளனர். மேலும், கேரள மாணவர் அமைப்பை சேர்ந்த மேலும் சில மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
மேலும், இந்திய மாணவர் கூட்டமைப்பிற்கு பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மாணவர் அமைப்பு தங்கள் கொடியிலிருந்து சுதந்திரம், ஜனநாயகம் மற்றும் சோசலிசம் என்ற வார்த்தைகளை அழித்துவிட்டு, அதற்கு பதிலாக குண்டாயிசம், பயங்கரவாதம் மற்றும் பாசிசம் என்று மாற்றிக் கொள்ளுங்கள் எனவும் கண்டனம் வலுத்து வருகிறது.