உ.பி.சட்டப்பேரவை தேர்தல்…6ம் கட்ட வாக்குப்பதிவு: முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் வாக்களித்தார்..!!
Author: Rajesh3 March 2022, 8:23 am
லக்னோ: உத்தரபிரதேசத்தில் 6வது கட்டமாக நடைபெறும் 57 சட்டசபை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று தொடங்கிய நிலையில், முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் வாக்களித்தார்.
உத்தரபிரதேசத்தில் 403 சட்டசபை தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடந்து வருகிறது. இதில் 5 கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில் மேலும் 2 கட்ட தேர்தல் மட்டுமே மீதமுள்ளது. மீதமுள்ள 111 தொகுதிகளில் 57 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது.
அம்பேத்கர்நகர், பல்ராம்பூர், சித்தார்த்நகர், பாஸ்தி, சந்த் கபிர் நகர், மகராஜ்கஞ்ச், கோரக்பூர், குஷிநகர், தியோரியா மற்றும் பல்லியா மாவட்டங்களில் இந்த தொகுதிகள் அடங்கியுள்ளன. ஆளும் பா.ஜனதா, சமாஜ்வாடி, காங்கிரஸ், பகுஜன் சமாஜ் உள்ளிட்ட கட்சிகளின் வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சைகள் என 676 பேர் களத்தில் உள்ளனர்.
இந்த தொகுதிகளில் நேற்று முன்தினம் மாலையுடன் பிரசாரம் நிறைவடைந்துள்ள நிலையில், வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் அனைத்தும் முடிவடைந்திருப்பதாக மாநில தேர்தல் அதிகாரி அஜய் குமார் சுக்லா கூறியுள்ளார்.
இந்நிலையில் உத்தரபிரதேசத்தில் 6வது கட்டமாக நடைபெறும் 57 சட்டசபை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு தற்போது தொடங்கி உள்ளது. இதனைத்தொடர்ந்து கோரக்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் உத்திர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தனது வாக்கை பதிவு செய்தார்.