பாலுறவுக்கு சம்மதம் தெரிவிக்கும் வயதை குறைக்க வேண்டும் : உச்சநீதிமன்ற நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் யோசனை!!
Author: Udayachandran RadhaKrishnan11 December 2022, 11:02 am
போக்சோ சட்டத்தில் குறிப்பிட்டுள்ள பாலுறவுக்கு சம்மதம் தெரிவிக்கும் வயதை மறுபரிசீலனை செய்ய வேண்டி உள்ளது என்று சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தெரிவித்துள்ளார்.
யுனிசிஸ் அமைப்புடன் சுப்ரீம் கோர்ட்டு சிறார் நீதி குழு இணைந்து நடத்திய போக்சோ சட்டம் தொடர்பான இரண்டு நாள் விவாத நிகழ்ச்சியில் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது 18 வயதுக்கும் கீழானவர்களின் பாலுறவு செயல்களும் அது இருவரின் சம்மதத்துடன் இருந்தாலும் போக்சோ சட்டத்தின்படி குற்றமாக இருப்பதால், இதுபோன்ற வழக்குகள் நீதிபதிகளுக்கு சவாலாக இருக்கின்றன என்றார்.
எனவே போக்சோ சட்டத்தில் குறிப்பிட்டு இருக்கும் பாலுறவுக்கு இசைவு தெரிவிக்கும் வயதை நல்வாழ்வு நிபுணர்களின் ஆய்வுகளைக் கொண்டு நாடாளுமன்றம் பரிசீலிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
சில நேரங்களில் குற்றவியல் நீதிமுறை பாதிக்கப்படுபவர்களின் மனவேதனையை அதிகரித்து விடுவதால் அதை தடுக்க நீதித்துறையுடன், அரசு நிர்வாகம் கைகோர்க்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.