கெஜ்ரிவால் வீட்டின் மீது காவி பெயிண்ட் வீசிய பாஜகவினர்: தி காஷ்மீர் பைல்ஸ் படத்திற்கு ஆதரவாக கோஷமிட்டு முற்றுகை…டெல்லியில் பரபரப்பு..!
Author: Rajesh30 March 2022, 6:08 pm
புதுடெல்லி: தி காஷ்மீர் பைல்ஸ் திரைப்படம் குறித்து கருத்து தெரிவித்த டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் இல்லத்தை முற்றுகையிட்ட 70க்கும் மேற்பட்ட பாஜகவினரை போலீசார் கைது செய்துள்ளனர்.
நாடு முழுவதும் பெரும் விவாத பொருளாக தி காஷ்மீர் பைல்ஸ் திரைப்படம் மாறியுள்ளது. இந்நிலையில், தி காஷ்மீர் பைல்ஸ் திரைப்படத்தை டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கடுமையாக விமர்சித்து இருந்தார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், காஷ்மீரில் பெரும் சோகம் நடந்துள்ளது. 32 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது உங்களுக்காக ஒரு படம் தயாரித்தோம் என்று காஷ்மீரி பண்டித்களிடம் அரசு சொல்கிறது. காஷ்மீர் பண்டித்களுக்கு மறுவாழ்வு தான் வேண்டுமே தவிர திரைப்படம் இல்லை.
என்னை பொறுத்தவரை இந்த திரைப்படம் முக்கியமில்லை. இது பாஜகவுக்கு முக்கியமானதாக இருக்கலாம். மேலும் படத்தை யூடியூப்பில் வெளியிட சொல்லுங்கள். அனைவரும் பார்க்கட்டும். திரைப்படத்திற்கு வரி விலக்கு எதற்கு. பாஜக தொண்டர்கள் செம்மறி ஆடுகளை போல நடந்து கொள்வதை நிறுத்துங்கள். பாஜகவின் ஆம் ஆத்மி கட்சிக்கு வாருங்கள். உங்களைப் பயன்படுத்தி தேசத்தைக் கட்டியெழுப்புவோம் என்றார்.
அரவிந்த் கெஜ்ரிவாலின் இந்த பேச்சுக்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்நிலையில் எம்பியும், பாஜக இளைஞரணி தேசிய தலைவருமான தேஜஸ்வி சூர்யா தலைமையில் டெல்லியில் உள்ள முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டு முன்பு இன்று பாஜகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தின்போது அவர்கள் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக கோஷமிட்டதோடு, கையில் பதாகைகள் ஏந்தி இருந்தனர். மேலும் சிலர் தடுப்புகளை மீறி கெஜ்ரிவால் வீட்டின் சுவர் மீது பெயிண்டை வீசி, சிசிடிவி கேமிராக்களை சேதப்படுத்தினர். இதையடுத்து, சுமார் 70க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாக டெல்லி வடக்கு மண்டல துணை போலீஸ் கமிஷனர் தெரிவித்துள்ளனர்.