காதலியை கொலை செய்து ஃபிரிட்ஜில் வைத்து காதலன் செய்த கொடூரம் : குலை நடுங்க வைத்த சம்பவம்!!

Author: Udayachandran RadhaKrishnan
15 February 2023, 11:57 am

தலைநகர் டெல்லியின் நஜப்ஹர் நகரின் மிட்ரான் கிராமத்தை சேர்ந்த இளைஞர் ஷகில் கெலாட் (வயது 24). இவர் மிட்ரான் கிராமத்தில் சொந்தமாக ஓட்டல் நடத்தி வருகிறார்.

இதனிடையே, போட்டி தேர்வு பயிற்சிக்காக கடந்த 2018-ம் ஆண்டு ஷகில் கெலாட் டெல்லியில் உள்ள உட்டம் நகரில் பயிற்சி வகுப்பில் சேர்ந்துள்ளார். அந்த பயிற்சி வகுப்பில் அரியானாவின் ஹஜ்ஜர் பகுதியை சேர்ந்த நிக்கி (வயது 22) என்ற இளம்பெண்ணும் சேர்ந்துள்ளார்.

அங்கு கெலாட்டிற்கும் நிக்கிக்கும் பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் காதலாக மாறியுள்ளது. அதன் பின்னர், கெலாட்டும் நிக்கியும் கிரேட்டர் நொய்டாவில் உள்ள ஒரே கல்லூரியில் சேர்ந்துள்ளனர்.

அங்கும், இருவரின் காதலும் தொடந்துள்ளது. அதன் பின்னர் கொரோனா ஊரடங்கு காலத்தில் கிரேட்டர் நொய்டாவில் வாடகை வீட்டில் கெலாட்டும் நிக்கியும் திருமணம் செய்யாமல் லிவ் இன் டுகெதர் முறையில் கணவன் மனைவியாக வாழ்ந்து வந்துள்ளனர்.

கொரோனா ஊரடங்கு முடிவுக்கு வந்த உடன் அவரவர் வீடுகளுக்கு சென்றுள்ளனர். பின்னர் மீண்டும் வர்கா பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து லிவ் இன் டுகெதர் முறையில் வாழ்ந்துள்ளனர்.

இதனிடையே, நிக்கியுடன் லிவ் இன் முறையில் கணவன் – மனைவியாக வாழ்வதை ஷகில் கெலாட் தனது குடும்பத்தினரிடம் தெரிவிக்காமல் மறைத்துள்ளார்.

தங்கள் மகன் மற்றொரு பெண்ணுடன் லிவ் இன் முறையில் வாழ்ந்து வருவதை அறியாத குடும்பத்தினர் ஷகிலுக்கு திருமணம் செய்துவைக்க முடிவு செய்து பெண் பார்த்துள்ளனர்.

நிக்கியுடன் வாழ்ந்து வந்தபோதும் பெற்றோர் பார்த்த பெண்ணையும் திருமணம் செய்ய ஷகில் முடிவு செய்துள்ளார். கடந்த 10ம் தேதி ஷகிலுக்கும் பெற்றோர் பார்த்துவைத்த அந்த பெண்ணுக்கும் திருமணம் நடைபெறுவதாக இருந்தது.

தன்னுடன் இத்தனை ஆண்டுகள் லிவ் இன் முறையில் வாழ்ந்து வந்த ஷகில் வேறொரு பெண்ணை திருமணம் செய்ய திட்டமிட்டுள்ளான் என்பதை அறிந்த நிக்கி திருமணத்திற்கு முன் தின நாளான பிப்ரவரி 9-ம் தேதி இரவு ஷகிலை சந்தித்து திருமணத்தை நிறுத்தும்படி கூறியுள்ளார்.

அப்போது அதற்கு ஷகில் மறுப்பு தெரிவிக்கவே நிக்கி அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றிய நிலையில் தனது காரில் வைத்திருந்த செல்போன் சார்ஜ் ஒயரை கொண்டு காதலி நிக்கியின் கழுத்தை நெரித்து ஷகில் கொலை செய்துள்ளார்.


பின்னர், நிக்கியில் உடலை தனது ஓட்டலில் உள்ள ஃபிரிட்ஜ்க்குள் வைத்துள்ளார். காதலி நிக்கியை கொலை செய்து உடலை பிரிஜ்க்குள் வைத்துவிட்டு காலை பெற்றோர் பார்த்த பெண்ணை ஷகில் திருமணம் செய்துகொண்டார்.

இந்நிலையில், நிக்கி மாயமானது குறித்து போலீசாருக்கு தகவல் கிடைத்த நிலையில் இது குறித்து விசாரணை நடைபெற்றது. விசாரணையில் நிக்கி தனது லிவ் இன் காதலனான ஷகிலை பார்க்க சென்றது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து போலீசார் நடத்திய சோதனையில் நிக்கியை கொலை செய்து உடலை தனது ஓட்டலில் உள்ள பிரிட்ஜில் வைத்துவிட்டு வேறொரு பெண்ணை ஷகில் திருமணம் செய்தது தெரியவந்தது.

இதையடுத்து நிக்கியின் உடலை கைப்பற்றிய போலீசார் காதலியை கொலை செய்து உடலை ஓட்டல் பிரிட்ஜில் வைத்துவிட்டு அதேநாளில் வேறொரு பெண்ணை திருமணம் செய்த ஷகில் கெலாட்டை கைது செய்தனர். இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

  • Sai Abhayankar Interview Highlightsவெறும் ரீல்ஸ்காக பாட்டு போடக்கூடாது…அனிருத்தை தாக்கிய சாய் அபயங்கர்..!
  • Views: - 480

    0

    0