நாட்டின் முதல் குடிமகள்.. 15-வது குடியரசு தலைவராக பதவியேற்ற திரௌபதி முர்மு : அரங்கை அதிர வைத்த முழக்கம்!!
Author: Udayachandran RadhaKrishnan25 July 2022, 10:34 am
நாட்டின் 15-வது குடியரசு தலைவராக திரௌபதி முர்மு நாடாளுமன்ற மைய மண்டபத்தில் பதவியேற்றார். குடியரசு தலைவர் திரௌபதி முர்முவுக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்வி ரமணா பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
குடியரசு தலைவர் மாளிகையில் இருந்து பாரம்பரிய முறைப்படி ஊர்வலமாக வருகை தந்து பதவியேற்றார். இந்த பதவி ஏற்பு நிகழ்வின் போது குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட பாஜக தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.
குடியரசு தலைவராக திரௌபதி முர்மு பதவியேற்புக்கு முன்பு, முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், அவரது குடும்பத்தினர் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர். அதனை தொடர்ந்து திரௌபதி முர்மு அவர்களுக்கு குடியரசு தலைவர் மாளிகையில் பிரமாண்டமான வரவேற்பு அளிக்கப்பட்டது.
குதிரைப்படை வீரர்கள் புடை சூழ பதவி ஏற்பு விழாவுக்கு வந்த திரவுபதி முர்மாவை நாடாளுமன்றத்தில் லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா, ராஜ்யசபா தலைவர் வெங்கயா நாயுடு வரவேற்றனர்.
குடியரசு தலைவராக பதவியேற்றுள்ள திரௌபதி முர்மு, நாட்டின் இரண்டாவது பெண் குடியரசுத் தலைவர் என்ற பெருமையை பெற்றுள்ளார். மேலும், முதல் பழங்குடிப் பெண், மிக உயர்ந்த அரசியலமைப்பு பதவியை வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.