நகைக்கடையில் புகுந்த வெள்ளம்… ரூ.2.5 கோடி மதிப்புள்ள தங்கம் அடித்து செல்லப்பட்ட சோகம்!!!
Author: Udayachandran RadhaKrishnan23 May 2023, 9:54 pm
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் மல்லேஸ்வரம் பகுதியில் நிகான் ஜுவல்லரி என்ற நகைக்கடை செயல்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் அங்கு பெய்த திடீர் கனமழை காரணமாக பெங்களூர் நகரமே வெள்ளக்காடானது.
இதனால் சாலையில் வெள்ளநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் பெரும் அவதியுற்றனர். அப்பொழுது அந்த பகுதியில் அமைந்திருந்த நிகான் ஜுவல்லரி நகைக்கடைக்குள் வெள்ளநீர் புகுந்தது.
இதில் கடையிலிருந்த ஒட்டுமொத்த நகைகளில் 80 சதவீத நகைகள் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டு விட்டன. கடை உரிமையாளர் நகைகளை மீட்க மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை தொடர்புகொண்டும் உதவி கிடைக்கவில்லை என்று சொல்லப்படுகிறது.
அடித்துச் செல்லப்பட்ட நகைகளின் மதிப்பு 2.5 கோடி ரூபாய் எனத் தெரியவந்துள்ளது. சமீபத்தில் தான் நிகான் ஜுவல்லரி கடையின் முதலாம் ஆண்டு நிறைவு விழா கொண்டாடப்பட்டது என்று கூறப்படுகிற நிலையில், வெள்ளத்தில் கடையின் நகைகள் அடித்துச் செல்லப்பட்டது அந்தப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.