திருமண மண்டபமாக மாறிய மருத்துவமனை… மணமகளுக்கு நேர்ந்த சோகம் : மணமகன் எடுத்த அதிரடி முடிவு!!!

Author: Udayachandran RadhaKrishnan
24 February 2023, 11:55 am

தெலுங்கானா மாநிலம் மஞ்செரியாலா மாவட்டம் செந்நூரை சேர்ந்த சைலஜா, ஜெய்சங்கர் பூபாலப்பள்ளி மாவட்டம் பசவராஜ்பள்ளி கிராமத்தை சேர்ந்த திருப்பதி ஆகியோருக்கு திருமணம் செய்ய பெரியோர்கள் முடிவு செய்து நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

இந்த நிலையில் நேற்று அவர்களுடைய திருமணம் மணமகள் வீட்டில் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் திடீரென்று மணமகள் சைலஜாவுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக மஞ்செரியாளாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

சைலஜாவை பரிசோதித்த டாக்டர்கள் அவருக்கு உடனடியாக வயிற்றில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று தெரிவித்தனர். எனவே சைலஜாவுக்கு இரண்டு நாட்களுக்கு முன் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

இது பற்றிய தகவல் மணமகன் வீட்டாருக்கு தெரிவிக்கப்பட்டது. திருமணத்திற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு விட்ட நிலையில் மீண்டும் ஒருமுறை திருமணத்திற்கான ஏற்பாடுகளை செய்வது இரண்டு குடும்பத்தினருக்கும் பொருளாதார ரீதியாக சிரமத்தை ஏற்படுத்தும் என்று ஏழைகளான இருவீட்டாரும் கருதினர்.

எனவே குறிப்பிட்ட முகூர்த்தத்தில் மருத்துவமனையிலேயே தாலி கட்டி திருமணம் செய்து விடலாம் என்று அவர்கள் முடிவு செய்தனர்.

தங்களுடைய பொருளாதார நிலை, திருமண ஏற்பாடுகள் ஆகிவை பற்றி மருத்துவமனை நிர்வாகத்திடம் அவர்கள் பேசினர்.

நீண்ட ஆலோசனைக்கு பின் மருத்துவமனை நிர்வாகம் எளிமையான முறையில் மருத்துவமனையில் திருமணம் செய்து கொள்ள அனுமதி அளித்தது.

அதன் அடிப்படையில் நேற்று மருத்துவமனையை திருமண மண்டபம் என்றும் மணமகள் படுத்திருந்த படுக்கையை திருமண மேடை என்றும் கருதி புரோகிதர் மந்திரம் படிக்க, மங்கள வாத்தியத்திற்கு பதிலாக உறவினர்கள், நண்பர்கள் ஆகியோர் கைதட்ட சைலஜா கழுத்தில் திருப்பதி தாலி கட்டினார்.

உடல்நிலை பாதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்து கொண்ட பெண்ணை நான் திருமணம் செய்து கொள்ள இயலாது என்றும் கூறாமல் சைலஜாவை திருமணம் செய்து கொண்ட திருப்பதிக்கு அனைவரும் வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்தனர்.

  • Rafael Nadal retirement reaction by Dhanush ஓய்வு அறிவிப்பு.. நடிகர் தனுஷின் உருக்கமான பதிவு..
  • Views: - 412

    0

    0