கல்லூரி முதல்வர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவம்… பரபரப்பு திருப்பம் : மாணவன் மீது பாய்ந்த வழக்கு!

Author: Udayachandran RadhaKrishnan
25 February 2023, 12:59 pm

கல்லூரி முதல்வர் மீது பெட்ரோல் உற்றி தீ வைத்த சம்பவத்தில் முன்னாள் மாணவன் கைது செய்யப்பட்டிருந்த சம்பவத்தில் பரபரப்பு திருப்பம் ஏற்பட்டுள்ளது.

மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் தனியார் மருந்தியல் (பார்மசி) கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியின் முதல்வர் விமுக்தா சர்மா (வயது 54) கடந்த திங்கட்கிழமை பணியை முடித்துவிட்டு கல்லூரியில் இருந்து தனது காரில் வீட்டிற்கு புறப்பட்டார்.

அப்போது விமுக்தாவின் காரை கல்லூரியில் பயின்ற முன்னாள் மாணவன் அஷுதோஷ் சீனிவஸ்தவா (வயது 24) இடைமறித்தார். அஷூதோஷ் கடந்த ஆண்டு ஜூலை மாதம் அனைத்து தேர்விலும் தேர்ச்சியடைந்தபோதும் தேர்ச்சி மதிப்பெண்ணை கல்லூரி நிர்வாகம் வழங்காமல் தாமதித்து வந்துள்ளது.

இது தொடர்பாக பல முறை கல்லூரி முதல்வர் விமுக்தாவை சந்தித்து மதிப்பெண் சான்றிதழை வழங்கும்படி அஷூதோஷ் கேட்டுள்ளார். இதனிடையே, காரில் இருந்து கீழே இறங்கிய கல்லூரி முதல்வர் விமுக்தா காரை இடைமறித்த முன்னாள் மாணவர் சீனிவஸ்தாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

அப்போது, தான் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றுவிட்டதால் மதிப்பெண் சான்றிதழை தரும்படி கல்லூரி முதல்வர் விமுக்தாவிடம் அஷூதோஷ் கேட்டுள்ளார்.

அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒருகட்டத்தில் வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த அஷூதோஷ் தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை கல்லூரி முதல்வர் விமுக்தாவின் உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொளுத்தினார்.

பின்னர், அங்கிருந்து அஷூதோஷ் தப்பியோடினார். உடலில் தீ வைத்ததால் விமுக்தா அலறி துடித்தார். அவரின் அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் விமுக்தாவை மீட்டு இந்தூர் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

80 சதவிகித தீக்காயங்களுடன் அனுமதிக்கப்பட்ட விமுக்தாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், கடந்த 5 நாட்களாக தீவிர சிகிச்சை பெற்று வந்த விமுக்தா இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக முன்னாள் மாணவன் அஷூதோஷ் சீனிவஸ்தவா மீது கொலை வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

  • Vikraman wife press meet அது ‘அதற்காக’ எடுக்கப்பட்ட வீடியோ.. விக்ரமன் மனைவி பரபரப்பு பேட்டி!