கலை அரங்கத்தை ஆய்வு செய்த புலனாய்வு அதிகாரி மேடையில் இருந்து தவறி விழுந்து பலி : வெங்கையா நாயுடு வருகையின் போது சோகம்!!
Author: Udayachandran RadhaKrishnan20 May 2022, 2:05 pm
தெலுங்கானா : ஹைதராபாத்தில் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவின் வருகையை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்து கொண்டிருந்த புலனாய்வு அதிகாரி கால் தவறி விழுந்து படுகாயமடைந்ததில் பலியானார்.
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் புலனாய்வுத் துறையின் உதவி இயக்குநர் குமார் அம்ரேஷ் (வயது 51). இவர் வெங்கையா நாயுடுவின் வருகையை முன்னிட்டு நகரில் உள்ள ஷில்பா கலை அரங்கில் உள்ள மேடையை ஆய்வு செய்து புகைப்படம் எடுத்துக் கொண்டே வந்தார்.
அப்போது மேடையின் நுனியில் இருந்த வெற்றிடத்தைக் கவனிக்காமல் கால் வைக்க, அங்கிருந்து கீழே விழுந்தார். அவருக்கு தலையில் உள்காயங்கள் ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார். புலனாய்வு அதிகாரி கால் தவறி விழுந்த விபத்துக் காட்சி அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது. இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது
அந்த விடியோவில் அரங்கத்தை தனது செல்போனில் புகைப்படம் எடுத்துக் கொண்டே வந்த குமார் அம்ரேஷ், மேடையின் நுனிப் பகுதிக்கு வந்துவிட்டதை கவனிக்காமல் சென்றார்.
அங்கு விளக்குகள் மற்றும் ஸ்பீக்கர்கள் பொருத்த அமைக்கப்பட்ட இடைவெளியில் அவர் கால் வைக்க, நிலைதடுமாறி, கீழே இருந்த பள்ளத்தில் விழுந்தார்.
அங்கு விளக்குகள் மற்றும் ஸ்பீக்கர்கள் வைக்கவும், தொழில்நுட்ப பணியாளர்கள் இருக்கவும் படிகட்டுடன் கூடிய ஒரு சிறிய அறை இருந்தது. அதற்குள் அவர் விழுந்துவிட்டார்.
இந்த காட்சிகள் அரங்கத்தினுள் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது தற்போது வைரலாக பரவி வருகிறது.