எம்எல்ஏ, அமைச்சர்களுக்கு மாத சம்பளம் ரூ.40 ஆயிரம் உயர்வு : முதலமைச்சர் அறிவிப்பு.. கடுப்பில் அரசு ஊழியர்கள்!!
Author: Udayachandran RadhaKrishnan7 September 2023, 7:36 pm
எம்எல்ஏ, அமைச்சர்களுக்கு மாத சம்பளம் ரூ.40 ஆயிரம் உயர்வு : முதலமைச்சர் அறிவிப்பு.. கடுப்பில் அரசு ஊழியர்கள்!!
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வியாழக்கிழமை தனது கேபினெட் அமைச்சர்கள், அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின் சம்பளத்தை உயர்த்துவதாக அறிவித்துள்ளார்.
இந்த மூன்று பிரிவினருக்கும் மாத சம்பளம் ரூ.40,000 உயர்த்தப்படுகிறது. சட்டமன்ற உறுப்பினர்களின் மாதச் சம்பளம் ரூ.10,000 ஆக இருந்தது. இப்போது ரூ.50,000 ஆக உயர்ந்துள்ளது.
அமைச்சர்களின் மாதச் சம்பளம் ரூ.10,900ல் இருந்து ரூ.50,900 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. கேபினெட் அமைச்சர்களின் சம்பளம் 11,000 ரூபாயில் இருந்து 51,000 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
கேபினட் அமைச்சர்கள், மாநில அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அவர்களின் மாதாந்திர சம்பளத்துடன் கூடுதலாகக் கிடைக்கும் மற்ற பலன்கள் அப்படியே தொடரும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இதர தொகைகளும் சேர்த்து சட்டமன்ற உறுப்பினர்கள் பெறும் மாதாந்திர ஊதிய வருவாய், ரூ.81,000 இல் இருந்து ரூ.1.21 லட்சமாக அதிகரிக்கும். இதேபோல, இனிமேல் அமைச்சர்கள் பெறும் மாதாந்திர ஊதிய வருவாய் ரூ.1.10 லட்சத்தில் இருந்து ரூ.1.50 லட்சமாக உயரும்.
வியாழக்கிழமை மாநில சட்டமன்றத்தில் உயர்த்தப்பட்ட ஊதியத்தை அறிவித்த முதல்வர், மேற்கு வங்கத்தில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்களின் சம்பளம் மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது மிகக் குறைவாக இருப்பதைக் கருத்தில் கொண்டு சம்பளத்தை உயர்த்த முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறியுள்ளார்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான அகவிலைப்படி வழங்க வேண்டும் என மாநில அரசு ஊழியர்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்துவரும் நிலையில், அமைச்சர் மற்றும் எம்எல்ஏக்களின் சம்பள உயர்வு அரசு ஊழியர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தும் என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.