‘என்னடா இங்கிருந்த பாலத்தை காணோம்’…500 டன் எடையுள்ள இரும்பு பாலம் அபேஸ்: அலேக்காக தூக்கி சென்ற பலே திருடர்கள்..!!
Author: Rajesh9 April 2022, 1:07 pm
பீகார்: ரோக்தாஸ் மாவட்டத்தில் 60 அடி நீளமுள்ள 500 டன் எடையுள்ள இரும்பு பாலம் திருடிச் செல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருடர்கள் இருப்பது திருட்டு நடப்பது சாதாரண ஒரு விஷயமாகிவிட்டது. கொள்ளையர் வீடு புகுந்து, கடையின் பூட்டை உடைத்து திருடிய பல சம்பவங்களை தினசரி வாழ்வில் நாம் கடந்து செல்ல வேண்டியுள்ளது. தவிர, திருடர்கள் கோவில் உண்டியலை உடைத்து பார்த்திருப்பீர்கள், வீட்டின் பூட்டை உடைத்து திருடியதை பார்த்திருப்பீர்கள்,ஆடு, கோழிகளை திருடிக்கூட பார்த்திருப்பீர்கள். இவ்வளவு ஏன் பம்ப்செட் திருடனை கூட பார்த்திருப்போம்.
இப்படி வித விதமான திருட்டிற்கு மத்தியில் ஒரு திருடன் ஒரு இரும்பு பாலத்தையே கொள்ளையடித்து சென்ற சம்பவத்தை நீங்கள் நிச்சயம் பார்த்திருக்க மாட்டீர்கள். இவ்வளவு ஏன் கேள்விகூட பட்டிருக்க மாட்டீர்கள். அப்படி ஒரு சம்பவம் பீகாரில் நடந்துள்ளது.
பீகார் மாநிலம் ரோக்தாஸ் மாவட்டம் நாசிரிங்க் போலீஸ் ஸ்டேஷன் பகுதியில் ஆற்றை கடந்து செல்லும் 60 அடி நீள பாலம் ஒன்று உள்ளது. கடந்த 1966ம் ஆண்டு இந்த பகுதியில் பாலம் இல்லாமல் மக்கள் படகில் தான் பயணம் செய்து வந்தனர். அப்பொழுது ஏற்பட்ட விபத்தில் படகில் சென்றவர்கள் படகு கவிழ்ந்து நீரில் முழ்கினர். இந்த விபத்திற்கு பிறகு கடந்த 1972ம் ஆண்டு இப்பகுதியில் இரும்பு பாலம் ஒன்று அமைக்கப்பட்டது.
அந்த பின் அந்த ஆற்றில் படகு சேவை நிறுத்தப்பட்டு மக்கள் இரும்பு பாலத்தையே பயன்படுத்த துவங்கிவிட்டனர். இந்நிலையில் அந்த இரும்பு பாலமும் சேதமடைந்த நிலையில் அப்பகுதியில் கான்கிரீட் காலம் ஒன்று இரும்பு பாலத்தை ஒட்டியே அமைக்கப்பட்டது. கான்கிரீட் பாலம் வந்ததும் மக்கள் எல்லோரும் புது பாலத்தை மட்டுமே பயன்படுத்தினர்.
இரும்பு பாலம் மக்கள் பயன்பாட்டில் இல்லாமல் போனது. இந்நிலையில் அப்பகுதியில் உள்ள சில திருடர்கள் அவ்வப்போது இந்த பாலத்தில் உள்ள இரும்பு கம்பியை அவ்வப்போது கழட்டி சென்று எடைக்கு போட்டு வந்தனர். இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு ஒரு நாள் காலையில் இந்த வழியாக மக்கள் சென்ற போது அங்கிருந்த இரும்பு பாலம் காணாமல் போயிருந்தது. 10 அடி அகலம் 12 அடி உயரம் 60 அடி நீளத்தில் இருந்த இரும்பு பாலம் மொத்தமாக காணாமல் போய்விட்டது.
அதை கண்டு அதிர்ச்சியடைந்த மக்கள் இது குறித்து போலீசில் புகார் அளித்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் அரசு அதிகாரிகள் யாரும் இந்த பாலத்தை எடுக்கவில்லை யாரோ திருடிச்சென்றது தெரியவந்தது.
பின்னர் நடந்த விசாரணையில் இந்த திருட்டு பட்டபகலில் தான் நடந்துள்ளது. சிலர் இந்த பாலத்தை சிலர் கழட்டிக்கொண்டிருக்கும்போது பார்த்துள்ளனர். அவர்கள் கனரக வாகனம் ஜேசிபி ஆகிய வாகனங்களுடன் வந்து பாலத்தை கழட்டி அலேக்காக எடுத்து சென்றுள்ளனர்.
பாலத்தை கழட்டும் போது மக்கள் கேள்வி கேட்ட போது அவர்கள், தாங்கள் நீர்வள ஆதார அமைப்பில் பணியாற்றுவதாகவும், அதிகாரிகளின் உத்தரவுபடியே பாலத்தை கழட்டுவதாகவும் கப்சா விட்டுள்ளனர். இந்த பாலம் திருடர்களால் காணாமல் போன விஷயம் மறுநாள் காலையில் தான் ஊர் முழுவதும் தெரிந்துள்ளது.
திருடர்கள் ஒரு இரும்பு பாலத்தையே அலேக்காக திருடிய சம்பவம் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. மேலும், பலே திருட்டு கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.