ஆணவத்தின் உச்சம்… காஸ்ட்லியான காரில் சாய்ந்து நின்ற ஏழைச் சிறுவனை எட்டி உதைத்த இளைஞர் : மனதை நொறுங்க வைக்கும் வீடியோ!!
Author: Udayachandran RadhaKrishnan4 November 2022, 5:40 pm
6 வயதே ஆன அந்த பிஞ்சு சிறுவனை துளி கூட இரக்கமே இல்லாமல், ஏதோ நாயை மிதித்து தள்ளுவதை போல இளைஞர் எட்டி உதைத்த சிசிடிவி காட்சிகள் காண்போரின் மனதை பதற வைப்பதாக உள்ளது.
கேரள மாநிலம் கண்ணூரில் உள்ள தலச்சேரிக்கு இளைஞர் ஒருவர் காரில் வந்துள்ளார். அப்போது சிறிது நேரம் சாலையோரத்தில் அவர் தனது காரை நிறுத்தியுள்ளார்.
அந்த சமயத்தில், 6 வயதான சிறுவன் ஒருவர், கார் உரிமையாளர் உள்ளே இருப்பது தெரியாமல் அந்தக் காரின் மீது லேசாக சாய்ந்துள்ளார்.
அழுக்கான சட்டை, எண்ணெய் வைக்காத தலை, ஒல்லியான தேகம் என அவனை பார்க்கும் போதே ஒரு ஏழை வீட்டு சிறுவன் என்பது தெளிவாக தெரிகிறது.
இந்நிலையில், தனது காரின் மீது ஏழை சிறுவன் சாய்ந்திருப்பதை பார்த்த அந்த இளைஞருக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்துவிட்டது. உடனே, காரில் இருந்து வெளியே இறங்கிய அந்த இளைஞர் பின்பக்கமாக வந்து, அந்த சிறுவனின் இடுப்பில் ஓங்கி உதைத்தார்.
ஏதோ தனக்கு நிகரான வயதுடைய நபரை உதைப்பதை போல அவர் உதைக்கிறார். இந்த தாக்குதலை சற்றும் எதிர்பார்க்காத அந்த பிஞ்சு சிறுவன், அதிர்ச்சியில் உதை வாங்கிய இடத்தை தடவிக்கொண்டே ஒதுங்கி நிற்கிறான்.
இதையடுத்து, பெரிய சாதனையை செய்துவிட்டது போல தனது காரில் அந்த இளைஞர் ஏறினார். இதை பார்த்த அங்கிருந்த பொதுமக்கள் சிலர், உடனடியாக அந்த காரை சுற்றி வளைத்தனர்.
காரில் இருந்து இறங்குமாறு அந்த இளைஞர்களை அவர்கள் கூப்பிட, அவரோ பயத்தில் காரின் உள்ளே இருந்தபடியே அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இதனைத் தொடர்ந்து, அங்கு மேலும் மக்கள் கூட்டம் சேரவே அவர் காரை வேகமாக எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றார். இதுகுறித்த சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் பொதுமக்கள் போலீஸாரிடம் புகார் அளித்தனர்.
விசாரணையில், அவர் பொன்னியாம்பலம் பகுதியைச் சேர்ந்த சிஷாத் (25) என்பது தெரியவந்தது. அவர் மீது வழக்கு பதிவு செய்த போலீஸார், அவரை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கார் மீது சிறுவன் சாய்ந்திருந்ததை பார்த்த கார் உரிமையாளர், சிறுவனை நகர்ந்து செல்ல கூறியிருக்கலாம், அல்லது காரை ஸ்டார்ட் செய்திருந்தால் அவர் விலகியிருப்பார்.
இதை செய்யாமல் ஒரு ஏழை சிறுவன்தானே என அவர் உதைத்துள்ளார். இதே பணக்காரர் நின்றிருந்தால் இப்படி ஒரு சம்பவம் நடந்திருக்குமா என நெட்டிசன்கள் பல்வேறு விமர்சனங்களை முன் வைக்கின்றனர்.