ஒரே வாரத்தில் மூன்றாவது முறை.. ஆம்புலன்ஸ் ஊழியர்கள் கெடுபிடி: உயிரிழந்த குழந்தையை பைக்கில் கொண்டு சென்ற தந்தை!!

Author: Udayachandran RadhaKrishnan
6 May 2022, 1:38 pm

ஆந்திரா : நாயுடு பேட்டை அரசு மருத்துவமனையில் இருந்து மகள் உடலை பைக்கில் சொந்த ஊருக்கு கொண்டு சென்ற தந்தையின் செயலால் மீண்டும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் திருப்பதி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மரணமடைந்த மகன் உடலை நெல்லூர் மாவட்டத்தில் உள்ள சொந்த ஊருக்கு பைக்கில் தந்தை கொண்டு சென்ற அவலம் நடைபெற்றது.

அதேபோல் நேற்று தண்ணீரில் மூழ்கி மரணம் அடைந்த மகன் உடலை நெல்லூர் மாவட்டத்தை சேர்ந்த தந்தை ஒருவர் சொந்த ஊருக்கு மோட்டார் சைக்கிளில் எடுத்துச் சென்ற சம்பவம் நடைபெற்றது.

இந்த நிலையில் திருப்பதி மாவட்டம் நாயுடு பேட்டை அரசு மருத்துவமனையில் இருந்து தண்ணீரில் மூழ்கி மரணம் அடைந்த மகள் உடலை தந்தை மோட்டார்சைக்கிளில் சொந்த ஊருக்கு கொண்டு சென்ற அவலம் இன்று நடைபெற்றது.

நாயுடு பேட்டை அருகே உள்ள கொத்த பள்ளியில் குட்டையில் தேங்கியிருந்த தண்ணீரில் விழுந்து இரண்டு வயது சிறுமி அக்ஷயா மரணம் அடைந்தார்.

சிறுமி உயிருடன் இருக்கலாம் என்று கருதி அங்கிருந்தவர்கள் நாயுடு பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அக்ஷயாவை பரிசோதித்த மருத்துவர்கள் அட்சயா இறந்து விட்டதாக கூறினர்.

இந்த நிலையில் அட்சையா உடலை சொந்த ஊருக்கு எடுத்து செல்ல அவருடைய தந்தை 108 ஆம்புலன்ஸ் உதவியை கோரினார். ஆனால் அவர்கள் மறுத்துவிட்டனர்.
தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் அதிக வாடகை கேட்டனர்.

மேலும் ஆட்டோ ஓட்டுநர்களும் ஆட்டோவில் உடலை எடுத்து செல்ல சம்மதிக்கவில்லை. எனவே அக்ஷயாவின் தந்தை தன்னுடைய மகள் உடலை நாயுடு பேட்டை அரசு மருத்துவமனையில் இருந்து கொத்தப்பள்ளிக்கு மோட்டார் சைக்கிளில் எடுத்து சென்றார்.

கடந்த ஒரே வாரத்தில் மட்டும் இதுபோன்ற சம்பவங்கள் மூன்று முறை நடைபெற்றுள்ளன. ஆனால் அரசும் அதிகாரிகளும் இதனை கண்டுகொள்ளாமல் இருந்து வருகின்றனர். எதிர்க்கட்சிகளுக்கு இது ஒரு அரசியல் நடத்துவதற்கான வாய்ப்பாக மட்டுமே அமைந்துள்ளது.

மூன்று சம்பவங்களிலும் பிள்ளைகளை பறிகொடுத்த பெற்றோர் தனியார் ஆம்புலன்ஸ்களுக்கு அவர்கள் கேட்ட தொகையை கொடுக்க இயலாத நிலையில் இருந்தது காரணமாக அமைந்துள்ளது. எனவே ஏழைகளின் நலன் கருதி இதற்கு சரியான தீர்வு காண வேண்டும் என்ற கோரிக்கை ஆந்திராவில் ஏற்பட்டுள்ளது.

  • Allu Arjun controversy போலீசை எதிர்த்த அல்லு அர்ஜுன்…தீவிர நடவடிக்கையில் தெலுங்கானா அரசு..!
  • Views: - 1295

    0

    0