கோடி கோடியாக குவிந்த காணிக்கை.. பணக்கார சாமினு சும்மாவா சொன்னாங்க : திருப்பதி உண்டியலில் இத்தனை கோடியா?
Author: Udayachandran RadhaKrishnan23 December 2022, 7:46 pm
திருப்பதி சென்று வந்தால் வாழ்வில் திருப்பம் ஏற்படுமடா என்ற பாடல் வரி பிரபலம். அந்த வகையில் வாழ்வில் திருப்பம் ஏற்படும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
மேலும் பணக்கார கடவுளாக திருப்பதி ஏழுமலையான் அழைக்கப்படுகிறார். இதனால் தினமும் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு அதிகளவில் பக்தர்கள் சென்று வருகின்றனர்.
இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்கின்றனர். 2021ல் இந்தியாவில் கொரோனா பரவ துவங்கி வேகமெடுத்தது.
இதனால் கோவிலில் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. அதன்பிறகு கொரோனா கட்டுக்குள் வந்தபோது கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் அனுமதிக்க துவங்கினர். தற்போது பெரும்பாலான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளதால் பக்தர்கள் தினமும் கோவிலில் ஆர்வமாக குவிந்து வருகின்றனர்.
குடும்பத்துடன் தரிசனத்துக்கு வரும் பக்தர்கள் நீண்ட வரிசையில் பல மணிநேர காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இவ்வாறு தரிசனம் செய்யும் பக்தர்கள் தங்களின் வேண்டுதலை நிறைவேற்றி உண்டியலில் காணிக்கை செலுத்துகிறார்கள்.
தங்கம், வைர நகைகள், வெள்ளிப் பொருட்கள், பணத்தை காணிக்கையாக வழங்கி வருகின்றனர். மேலும், இ-உண்டியல் மூலம் ஆன்லைனிலும் பக்தர்கள் தினமும் லட்சக்கணக்கில் காணிக்கை செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 8 மாதங்களில் ரூ.1000 கோடியை கடந்ததாக திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. 2022 ஏப்ரல் மாதம் தொடங்கி நவம்பர் வரை ரூ.1029 கோடி வசூல் செய்துள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.