போராட்டத்தின் போது 22 வயது இளம் விவசாயிக்கு ஏற்பட்ட விபரீதம் : பிரேத பரிசோதனை தடுத்து நிறுத்தம்…!!!

Author: Udayachandran RadhaKrishnan
23 February 2024, 8:23 am

போராட்டத்தின் போது 22 வயது இளம் விவசாயிக்கு ஏற்பட்ட விபரீதம் : பிரேத பரிசோதனை தடுத்து நிறுத்தம்…!!!

விவசாயிகள் போராட்டத்தில் விவசாயிகளுக்கும், போலீசாருக்கும் நடந்த மோதலில் 22 வயதான விவசாயி உயிரிழந்த நிலையில் அவர் உயிரிழப்பதற்கு முன்னர் இறுதியாக பேசிய வார்த்தைகள் குறித்து உருக்கமான தகவல் வெளியாகியுள்ளது.

விளைபொருட்களின் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டம் கொண்டுவர வேண்டும், வேளாண் கடன் தள்ளுபடி, விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, விவசாயிகள் போராட்டத்தை அறிவித்தனர்.

போராடும் விவசாயிகளை டெல்லிக்குள் நுழைய விடாமல் தடுக்க டெல்லி எல்லையில் போலீசார் குவிக்கப்பட்டனர். பஞ்சாப்பில் இருந்து புறப்பட்ட விவசாயிகள், பஞ்சாப் – ஹரியானா இடையே ஷாம்பு, கானாரி ஆகிய இடங்களில் உள்ள எல்லைகளில் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

மேலும் விவசாயிகள் டெல்லியை நோக்கி முன்னேறுவதைத் தடுக்க பஞ்சாப், ஹரியானா என டெல்லியை ஒட்டிய எல்லைகளில் போலீசார், துணை ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் நேற்று பஞ்சாப் – ஹரியானா இடையிலான கானாரி எல்லையில் விவசாயிகளுக்கும், போலீசாருக்கும் ஏற்பட்ட மோதலில் 22 வயதான விவசாயில் சுப்கரன் சிங் உயிரிழந்தார்.

போலீஸ் துப்பாக்கிச் சூடு காரணமாக மரணம் நிகழ்ந்ததாக விவசாயி தலைவர் சர்வான் பந்தேர் தெரிவித்திருந்தார். ஆனால், இந்தச் சம்பவத்தை ஹரியானா காவல் துறை மறுத்திருந்தது. எனினும், சுப் கரணின் மரணத்திற்கான சரியான காரணம் இன்னும் தெரியவில்லை. அதேநேரத்தில் சுப் கரண் சிங் மரணம் தொடர்பாக பலரும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்,

இந்த நிலையில், இளம் விவசாயியின் உடலைப் பிரேதப் பரிசோதனை செய்ய அனுமதிக்க மாட்டோம் என விவசாயச் சங்கத் தலைவர்கள் தெரிவித்திருப்பதுடன், அதைத் தடுத்தும் நிறுத்தியுள்ளனர். விவசாயத் தலைவர் ஜக்ஜித் சிங் தலேவால், ‘பஞ்சாப் அரசு அவரை தியாகி என அறிவித்து, அதற்கேற்ப சலுகைகளை வழங்க வேண்டும். மேலும், பிரேதப் பரிசோதனையை நடத்த ஐந்து பேர் கொண்ட குழுவை அரசு அமைக்க வேண்டும். அவரது குடும்பத்துக்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும். இழப்பீட்டில் ஒரு பகுதியாக மத்திய அரசு வேலை வழங்க வேண்டும்’ என அவர் அரசிடம் கோரிக்கை வைத்துள்ளார். இதன் காரணமாக, அவரது பிரேதப் பரிசோதனை நிறுத்திவைக்கப்பட்டு உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் உயிரிழப்பதற்கு முன்னர் அவர் இறுதியாக பேசிய வார்த்தைகள் குறித்து உருக்கமான தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இறப்பதற்கு முன்னர் சுப்கரன் சிங் தனக்கும் சக விவசாயிகளுக்கும் காலை உணவு தயாரித்துள்ளார்.

அப்போது, “உணவைப் பகிர்ந்து கொள்ளவோ ​​அல்லது ஒன்றாக உட்காரவோ இன்னொரு வாய்ப்பு கிடைக்காமல் போகலாம்” என அருகில் இருந்தவர்களிடம் கூறியிருக்கிறார். சுப்கரன் சிங்கிற்கு இரண்டு சகோதரிகள் மற்றும் மன நலம் பாதிக்கப்பட்ட தந்தை உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

  • Salman Khan Sikandar movie updates சல்மான் கான் போட்ட திடீர் கண்டிஷன்..ஏ.ஆர்.முருகதாஸுக்கு வந்த சிக்கல்..அப்போ SK-23..?
  • Views: - 302

    0

    0