நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப லஞ்சம்… சர்ச்சையில் சிக்கிய திரிணாமுல் எம்பி ; சஸ்பெண்ட் செய்ய வலியுறுத்தல்!!

Author: Babu Lakshmanan
16 October 2023, 2:26 pm

அதானி குழுமம், பிரதமர் மோடி குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப தொழிலதிபரிடம் திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா லஞ்சம் வாங்கியதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

நாடாளுமன்ற கூட்டத் தொடரில் அதானி குழுமம் மற்றும் பிரதமர் மோடியை தொடர்புபடுத்தி காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சியினர் கடும் கேள்விகளையும், விமர்சனங்களையும் முன்வைத்தனர். இந்த நிலையில், அதானி குழுமம், பிரதமர் மோடி குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப, பிரபல தொழிலதிபரான தர்ஷன் ஹிராநந்தானியிடம் திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா லஞ்சம் வாங்கியதாக, பாஜகவின் நிஷிகாந்த் துபே குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக மக்களவை தலைவர் ஓம் பிர்லாவுக்கு அவர் எழுதிய கடிதத்தில், மஹுவா மொய்த்ரா நாடாளுமன்றத்தில் சபை அவமதிப்பு மற்றும் கிரிமினல் சதி ஆகியவற்றை செய்துள்ளார். பிரபல தொழிலதிபரான தர்ஷன் ஹிராநந்தானியிடம் அவர் லஞ்சம் வாங்கியுள்ளார். நாடாளுமன்றத்தில் மொய்த்ராவின் கேள்விகள் முன்னாள் வணிக நலன்களை நிலைநிறுத்துவதை நோக்கமாகக் கொண்டதாக இருந்துள்ளது.

திரிணாமுல் எம்.பி.க்கு ஹிரானந்தனி ரூ.2 கோடியும், விலை உயர்ந்த ஐ-போன் போன்ற பரிசுகளையும் பெற்றுள்ளார். தேர்தலில் போட்டியிடுவதற்காக 75 லட்சம் பணத்தையும் வாங்கியுள்ளார். கடந்த 2019 மற்றும் 2023க்கு இடையில், எம்பி கேட்ட 61 கேள்விகளில், 50 கேள்விகள் தர்ஷன் ஹிரானந்தனியின் உத்தரவின் பேரில் இருந்துள்ளது. மேலும், அந்த தொழிலதிபருக்கு தனது மக்களவைக் கணக்கிற்கான அணுகலை வழங்கியுள்ளார். எனவே, அவரை சஸ்பெண்ட் செய்ய வேண்டும், என்று கூறினார்.

பாஜகவின் நிஷிகாந்த் துபேவின் இந்த குற்றச்சாட்டுக்கு பதிலளித்த திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா, எந்த வகையான விசாரணையையும் எதிர்கொள்ள தயார் என்று கூறியுள்ளார். அதேவேளையில், இந்தக் குற்றச்சாட்டுக்கு ஹிரானந்தானி குழுவும் மறுத்துள்ளது.

  • Rashmika Mandanna injury update வீல் சேரில் பரிதாபமாக வந்த நடிகை ராஷ்மிகா…பீலிங்ஸ் ஆன ரசிகர்கள்…!