புகைப்பட கலைஞர்களின் கேமராக்களை பிடுங்கி ஏழுமலையான் உண்டியலில் போட்ட விஜிலென்ஸ் : திருப்பதி கோவிலில் பரபரப்பு!!
Author: Udayachandran RadhaKrishnan13 November 2022, 3:52 pm
பக்தர்களுக்கு தொல்லை கொடுப்பதாக தேவஸ்தான விஜிலன்ஸ் துறையினர் பறிமுதல் செய்த கேமராக்களை உண்டியலில் சமர்ப்பித்தனர்.
தங்களிடம் இருக்கும் செல்போன்கள் மூலம் வீடியோ பதிவு செய்வது, புகைப்படம் எடுப்பது ஆகியவை தற்காலத்தில் அதிகரித்துவிட்டது.
எனவே இப்போது போட்டோகிராபர்களுக்கு பார்க், பீச், கோவில் ஆகியவை போன்ற பொது இடங்களில் பெரும்பாலும் வேலையில்லாமல் போய்விட்டது..
ஆனால் திருப்பதி மலையை பொறுத்தவரை சாமி கும்பிடுவதற்காக வரும் பக்தர்கள் போட்டோகிராபர்கள் மூலம் படம் எடுத்து அதை உடனடியாக கையோடு பிரிண்ட் போட்டு வாங்கி செல்ல ஆர்வம் காட்டுகின்றனர்.
எனவே திருப்பதி மலையில் சுமார் 50-க்கும் மேற்பட்ட நடமாடும் போட்டோகிராபர்கள் பக்தர்களை படம்பிடித்து பிரின்ட் போட்டு கொடுத்து அனுப்புவதை தொழிலாக செய்து வருகின்றனர்.
அவர்களில் வெகு சிலருக்கு இந்த தொழிலை திருமலையில் செய்ய தேவஸ்தானம் அனுமதி அளித்துள்ளது. பலர் எவ்வித அனுமதியும் இல்லாமல் போட்டோ எடுப்பதை தொழிலாக செய்து வந்தனர்.
இந்த நிலையில் போட்டோகிராபர்கள் பக்தர்களுக்கு தொல்லை கொடுப்பதாக குற்றச்சாட்டுகள் ஏற்பட்டன. எனவே போட்டோகிராபர்கள் வைத்திருந்த கேமராக்களை தேவஸ்தான விஜிலன்ஸ் ஊழியர்கள் பறித்து கோவில் உண்டியலில் சமர்ப்பித்து விட்டனர்.
இதனால் தொழில் செய்யும் வாய்ப்பையும் பறிகொடுத்து, தொழிலுக்கு மூலதனமாக விளங்கும் கேமராக்களையும் பறிகொடுத்த போட்டோகிராபர்கள் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் புலம்பும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
ஏழுமலையான் உண்டியலில் சமர்ப்பிக்கப்படும் பொருள் எதுவாக இருப்பின் அது தேவஸ்தானத்திற்கே சொந்தம் என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே இந்த கேமராக்களை போட்டோகிராபர்கள் இனிமேல் ஏலத்தின் மூலம் மட்டுமே திரும்ப பெற முடியும். தேவஸ்தானத்திடம் அனுமதி பெறாமல் புகைப்படம் எடுக்கும் தொழில் செய்கிறார் என்ற குற்றச்சாட்டின் பேரில் பறி முதல் செய்யப்பட்ட கேமராக்களை உண்டியலில் சமர்ப்பிக்க சட்டப்படி அனுமதி உள்ளதா என்பது மில்லியன் டாலர் கேள்வி.