காதல் திருமணத்தால் கலவரமான கிராமம் : கிணற்றில் நீர் அருந்திய சிறுவனை தாக்கிய ஒரு தரப்பு.. இருதரப்பு மோதலால் போலீசார் குவிப்பு!!
Author: Udayachandran RadhaKrishnan26 June 2022, 8:34 pm
ஆந்திரா : விஜயநகர மாவட்டத்தில் ஒரே கிராமத்தைச் சேர்ந்த இரு பிரிவினருடைய சரமாரி மோதல் ஏற்பட்டதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
ஆந்திர மாநிலம் விஜயநகர் மாவட்டம் நெல்லிமர்லா மண்டலம் மலையடா கிராமத்தில் இரு பிரிவினர் உள்ளனர். இன்று ஒரு பிரிவினர் பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் மற்றொரு பிரிவைச் சேர்ந்த சிறுவன் ஒருவன் நீர் அருந்தியுள்ளான். இதனைப் பார்த்த ஒரு பிரிவினர் அந்த ஒரு சிறுவனை தாக்கி அனுப்பியுள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த ஒரு பிரிவினர் மற்றொரு பிரிவினர் பகுதிக்கு சென்று தாக்குதல் நடத்தினர். இதில் இரு பிரிவினரும் கற்கள் மற்றும் கட்டைகளால் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இதனால் கிராமம் முழுவதும் பெரும் பதற்றம் ஏற்பட்டது.
இதனையடுத்து அங்கு வந்த போலீசார் இருவரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இதில் எட்டு பேர் காயங்களுடன் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் அப்பகுதியில் போலீசார் நடத்திய விசாரணையில் அப்பகுதியில் இருக்கும் இரு பிரிவினருக்கும் இடையே கடந்த மாதம் ஒரு காதல் கலப்பு திருமணம் நடைபெற்றது. இதன் காரணமாக இரு பிரிவினரிடையே மோதல் ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து இன்றும் அப்பகுதியில் மோதல் ஏற்பட்டது. தொடர்ந்து மேலும் மோதல்கள் ஏற்படும் என்பதால் போலீசார் அதிகளவில் குவிக்கப்பட்டு உள்ளனர். ஒரு காதல் திருமணத்தால் அந்த கிராமமே கலவர பூமியானது பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.