ஆந்திரா தலைநகராக விசாகப்பட்டினம்… ஒரு மாசத்துல எல்லாத்தையும் மாத்துங்க : முதலமைச்சர் அறிவிப்பு!!
Author: Udayachandran RadhaKrishnan20 September 2023, 8:17 pm
ஆந்திராவில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக ஜெகன் மோகன் ரெட்டி உள்ளார். ஆந்திரா மாநிலத்தின் தலைநகராக ஹைதராபாத் இருந்தது. ஆனால் ஆந்திராவில் இருந்து கடந்த 2014ல் தெலங்கானா தனி மாநிலமாக பிரிந்தது.
இதையடுத்து ஹைதராபாத் என்பது தெலங்கானாவின் தலைநகராக மாறியது. இதனால் ஆந்திராவுக்கு புதிய தலைநகரை உருவாக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதையடுத்து அமராவதி தலைநகராக அறிவிக்கப்பட்டது. அமராவதியில் தலைமை செயலகம், சட்டசபை அமைக்கப்பட்டு கூட்டங்கள் நடக்க தொடங்கின.
இதற்கிடையே தான் ஜெகன் மோகன் ரெட்டி தனது தேர்தல் வாக்குறுதியில் ஆந்திராவில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும் 3 தலைநகரங்கள் உருவாக்கப்படும் என அறிவித்தார். அதன்படி அமராவதி, கர்னூல் மற்றும் விசாகப்பட்டினம் உள்ளிட்டவை தலைநகரங்களாக உருவாக்கப்படும் என்றார். அதாவது அமராவதியில் சட்டசபை கூட்டம் நடக்கும். கர்னூலில் உயர்நீதிமன்றம் செயல்படும். விசாகப்பட்டினத்தில் தலைமை செயலகம் அமைக்கப்படும் என்றார்.
அதன்படி இன்று ஆந்திராவில் அமைச்சரவை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் மாநிலத்தின் நிர்வாக தலைநகராக விசாகப்பட்டினம் என அவர் அறிவித்தார். மேலும் விசாகப்பட்டினம் தசரா தினமான அக்டோபர் மாதம் 24ம் தேதி முதல் செயல்பாட்டு வரும். அங்கு தான் தலைமை செயலகம் செயல்படும்.
இதனால் அக்டோபர் மாதம் 24ம் தேதிக்குள் அனைத்து அலுவலகங்களையும் விசாகப்பட்டினத்துக்கு மாற்ற தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதன்மூலம் விரைவில் ஆந்திராவின் தலைநகராக விசாகப்பட்டினம் மாற உள்ளது. இந்த அறிவிப்புக்கு ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
அதேநேரத்தில் மற்றவர்கள் எதிர்ப்பு தெரிவிக்க தொடங்கி உள்ளனர். மேலும் ஆந்திரா தலைநகர் தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது என்பதால் இந்த விவகாரம் ஆந்திராவில் தற்போது விவாதத்தை கிளப்பி உள்ளது.
0
0