விண்ணைப் பிளந்த ‘ஜெய் ஹிந்த்’ முழக்கம்… வாகா எல்லையில் மிடுக்கான அணிவகுப்பு… குவிந்த ஆயிரக்கணக்கான மக்கள்..!!
Author: Babu Lakshmanan15 August 2023, 9:56 pm
பஞ்சாப் ; இந்தியா – பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் தேசியக் கொடியை இறக்கும் நிகழ்ச்சியை காண ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்தனர்.
பஞ்சாப் மாநிலத்தில் இந்தியா – பாகிஸ்தான் எல்லைப்பகுதி அமைந்துள்ளது. அடாரி இந்தியாவுக்கும், வாகா பாகிஸ்தானுக்கும் எல்லையாக இருந்து வருகிறது. இந்தப் பகுதி தான் இருநாட்டு எல்லை பாதுகாப்பு படை வீரர்களும் சந்திக்கும் இடமாகும். எல்லைப் பகுதியில் சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினம் உள்ளிட்ட முக்கிய தினங்களின் போது தேசிய கொடிய ஏற்றுவது வழக்கம்.
அந்த வகையில், இந்தியாவின் 77வது சுதந்திர தின விழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, இந்தியா -பாகிஸ்தான் வாகா எல்லையில் தேசியக்கொடி இறக்குதல் நிகழ்ச்சி விமரிசையாக நடைபெற்றது. எல்லை பாதுகாப்பு படை வீரர்களின் மிடுக்கான அணிவகுப்புடன் தேசிய கொடியை இறக்கும் நிகழ்ச்சி கோலகலமாக நடைபெற்றது.
இதனைக் காண்பதற்காக வாகா எல்லையில் ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்து தேசியக்கொடிக்கு மரியாதை செலுத்தினர். அப்போது, ஜெய்ஹிந்த என்று விண்ணை முட்டும் அளவுக்கு மக்கள் முழக்கமிட்டனர்.