யானைகளின் கூடாரமாக மாறிய வயநாடு… அதிகரிக்கும் உயிரிழப்புகள் ; ஸ்பாட்டுக்கு வந்த ராகுல்.. கண்ணீரில் குமுறிய மக்கள்!

Author: Udayachandran RadhaKrishnan
18 February 2024, 10:53 am

யானைகளின் கூடாரமாக மாறிய வயநாடு… அதிகரிக்கும் உயிரிழப்புகள் ; ஸ்பாட்டுக்கு வந்த ராகுல்.. கண்ணீரில் குமுறிய மக்கள்!

கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் வனப்பகுதியின் அருகே உள்ள கிராமங்களில் கடந்த சில நாட்களாக வன விலங்குகள் புகுந்து பொதுமக்களைத் தாக்கி வருகிறது. கடந்த மாதம் 31-ம் தேதி யானை தாக்கியதில் லட்சுமணன் (65) என்பவர் பலியானார்.

கடந்த 10-ம் தேதி மானந்தவாடி பகுதியில் அஜீஷ் (42) என்பவரை காட்டு யானை விரட்டிச் சென்று தாக்கியது. இதில் அவரும் உயிர் இழந்தார். இந்த சம்பவங்கள் வயநாடு மாவட்டத்தில் பதட்டத்தை ஏற்படுத்தியது.

வனவிலங்குகள் ஊருக்குள் வருவதை தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தினர். இதனை தொடர்ந்து வனத்துறையினர் அதற்கான நடவடிக்கைகளில் இறங்கினர்.

இந்தப் பணியில் தற்காலிக வன ஊழியரும், சுற்றுலா வழிகாட்டியுமான பால் (50) என்பவரும் இருந்தார். இவர் காட்டுப்பகுதியில் யானை நடமாட்டம் உள்ளதாக கூறப்பட்ட பகுதிக்கு மக்கள் வராமல் இருக்க அவர்களை திருப்பி விட்டுக்கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த காட்டு யானை பாலை தாக்கியது. இதில் அவர் படுகாயம் அடைந்தார். உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வன ஊழியர் பால் பரிதாபமாக இறந்துவிட்டார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த கிராம மக்களும், அரசியல் கட்சியினரும் போராட்டத்தில் இறங்கினர். நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி, பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகள் சார்பில் முழு அடைப்பு போராட்டமும் நடத்தப்பட்டது.

இந்த போராட்டத்தின் போது வன ஊழியர் பால் உடலுடன் மக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். சுமார் 4½ மணி நேரம் நீடித்த இந்தப் போராட்டம் திடீரென வன்முறையாக மாறியது.

வனத்துறை வாகனத்தை முற்றுகையிட்டவர்கள், அதில் வந்த துணை வன அதிகாரி ஷாஜியை தாக்கினர். வாகனத்தையும் சேதப்படுத்தினர். இதனால் நிலைமையை சமாளிக்க போலீசார் தடியடி நடத்தினர். இதில் பலர் காயமடைந்தனர். இந்த சமய த்தில் அங்கு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் வந்தனர். அவர்களுக்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அப்பகுதியில் பதட்டமான சூழ்நிலை நிலவியது.

இதற்கிடையே, சம்பவம் குறித்து வயநாடு தொகுதி எம்.பி.யும், காங்கிரஸ் முன்னாள் தலைவருமான ராகுல் காந்திக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, உத்தர பிரதேச மாநிலத்தில் இந்திய ஒற்றுமை நீதி நடைபயணத்தில் இருந்த அவர், தனது பயணத்தை நிறுத்திவிட்டு நேற்று மாலை கேரளா சென்றார்.

இந்நிலையில், இன்று காலை ராகுல் காந்தி வயநாடு மாவட்டம் மானந்தவாடிக்குச் சென்றார். அங்கு யானை தாக்கியதில் பலியான அஜீஷ் வீட்டிற்கு சென்ற அவர், குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
அஜீஷின் மகன் ஆலனை தனது அருகில் அமரவைத்துப் பேசினார். அஜீஷின் மனைவி ஷீபா, பெற்றோர் ஜோசப்-எல்சி ஆகியோரிடமும் ராகுல் காந்தி பேசினார்.

அதன்பின், அங்கிருந்து புறப்பட்ட அவர், பலியான பால் வீட்டுக்குச் சென்றார். அங்கு பாலின் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறினார். அவருடன் அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் வேணுகோபால் மற்றும் கட்சியினர் சென்றிருந்தனர்.

  • Aamir Khan Quit Smoking for Son மகனுக்காக அதை பண்ண ரெடி…பட விழாவில் அமீர் கான் பரபர பேச்சு..!
  • Views: - 475

    0

    0