ராகுல் காந்தி தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிப்பு.. காங்கிரஸ் சார்பில் யார் போட்டி?

Author: Hariharasudhan
15 October 2024, 5:41 pm

ராகுல் காந்தி போட்டியிட்ட மாபெரும் வெற்றி பெற்று, பின்னர் விலகிய வயநாடு தொகுதியில் நவம்பர் 13ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

டெல்லி: இன்று (அக்.15) செய்தியாளர்களைச் சந்தித்த இந்தியத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், ஜார்க்கண்ட் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களுக்கு சட்டமன்றத் தேர்தல் தேதியை அறிவித்தார். அதோடு, 15 மாநிலங்களில் 48 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதியையும், 2 மக்களவைத் தொகுதிக்கான இடைத்தேர்தல் தேதிகளையும் அறிவித்தார்.

இதன்படி, வயனாடு மக்களவைத் தொகுதிக்கு நவம்பர் 13ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 18ஆம் தேதி வேட்புமனுத் தாக்கல் தொடங்கப்பட்டு, 25ஆம் தேதியுடன் வேட்புமனுத் தாக்கல் நிறைவு பெறுகிறது. தொடர்ந்து, அக்டோபர் 30ஆம் தேதி வேட்புமனுவை திரும்பப் பெறுவதற்கான கடைசி நாளாகும். இதனையடுத்து, நவம்பர் 23ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று அன்றே முடிவுகள் வெளியாகும்.

சமீபத்தில் நடைபெற்று முடிந்த 2024 மக்களவைத் தேர்தலில் வயநாடு மற்றும் ராபேரெலி ஆகிய இரண்டு தொகுதிகளிலும் மக்களவை எதிர்கட்சித் தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ராகுல் காந்தி வெற்றி பெற்றார். ஆனால், ஒரேயொரு தொகுதியில் மட்டுமே எம்பியாக இருக்க முடியும் என்பதால், வயநாடு தொகுதியில் இருந்து விலகினார். இதன் மூலம், தனது குடும்பத்தின் கோட்டையாக கருதப்படும் ராபேரெலி தொகுதி எம்பியாக செயல்பட்டு வருகிறார்.

இதையும் படிங்க: மகாராஷ்டிரா, ஜார்க்கண்டில் சட்டமன்றத் தேர்தல் எப்போது? ECI அறிவிப்பு!

இந்தத் தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் அன்னி ராஜாவை 3 லட்சத்து 64 ஆயிரத்து 422 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதன்படி, ராகுல் காந்தி 6 லட்சத்து 47 ஆயிரத்து 445 வாக்குகளும், அன்னி ராஜா 2 லட்சத்து 83 ஆயிரத்து 23 வாக்குகளும், பாஜக வேட்பாளர் சுரேந்திரன் ஒரு லட்சத்து 41 ஆயிரத்து 45 வாக்குகளையும் 2024 தேர்தலில் பெற்றிருந்தனர்.

Priyanka Gandhi Vardha

முன்னதாக, 2019 மக்களவைத் தேர்தலிலும் 4 லட்சத்து 31 ஆயிரத்து 770 வாக்குகள் வித்தியாசத்தில் ராகுல் காந்தி வெற்றி பெற்றிருந்தார். இந்த நிலையில், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள வயநாடு இடைத்தேர்தலில் ராகுல் காந்தியின் சகோதரியும், காங்கிரஸ் பொதுச் செயலாளருமான பிரியங்கா காந்தி வர்தாவை வேட்பாளராக அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால், ராகுல் காந்தி குடும்பத்திற்கு வயநாடு தொகுதி மிகவும் பரீட்சயமான தொகுதி ஆகும்.

  • kalanidhi maran office 8th floor was locked for many years கலாநிதி மாறன் அலுவலகத்தில் அமானுஷ்யம்? 8 ஆவது மாடியில் அப்படி என்ன இருக்கிறது?