முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அவசர அவசரமாக கடிதம் எழுதிய மம்தா … முக்கிய ஆலோசனை நடத்த டெல்லி வருமாறு 22 எதிர்கட்சி தலைவர்களுக்கு அழைப்பு..!!

Author: Babu Lakshmanan
11 June 2022, 6:23 pm

குடியரசு தலைவர் தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்த முதலமைச்சர் ஸ்டாலின் உள்பட 22 எதிர்கட்சி தலைவர்களுக்கு மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கடிதம் எழுதியுள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் பலவீனத்தாலும், அபாரமான அரசியல் நகர்த்தல்களாலும் தேசிய அளவில் பாஜக அசைக்க முடியாத சக்தியாக விளங்கி வருகிறது. தேசிய அளவில் 2வது பெரிய கட்சியாக இருக்கும் காங்கிரஸ் கட்சிக்கு, தற்போது பாஜகவை தோற்கடிக்கும் திறன் இல்லை. எனவே, 2024ல் நடக்கும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவே வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்று கூறப்படுகிறது. தேர்தலுக்கான பணிகளை பாஜக ஏற்கனவே தொடங்கி விட்டது.

இந்த சூழலில், எதிர்கட்சிகளை ஒன்றிணைத்தால் மட்டும் பாஜகவை நெருங்க முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது. எனவே, பாஜக ஆளாத மாநில தலைவர்களை ஒருங்கிணைக்கும் முயற்சியில் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி ஈடுபட்டு வருகிறார்.

இதனிடையே, வரும் 18ம் தேதி குடியரசு தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெற உள்ளது. இதில், எதிர்கட்சி தரப்பில் யாரை வேட்பாளராக நிறுத்துவது என்பது பெரிய கேள்விக்குறியாக எழுந்துள்ளது. காங்கிரஸ் அல்லது எதிர்க்கட்சிகளின் சார்பில் போட்டி வேட்பாளர் நிறுத்தப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்த நிலையில், குடியரசு தலைவர் தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்த முதலமைச்சர் ஸ்டாலின் உள்பட 22 எதிர்கட்சி தலைவர்களுக்கு மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கடிதம் எழுதியுள்ளார். காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால், கேரள முதல்வர் பினராய் விஜயன், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், மகாராஷ்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்கரே உள்ளிட்ட 22 எதிர்க்கட்சிகளின் தலைவர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளார்.

அந்தக் கடிதத்தில், வரும் 15ம் தேதி டெல்லியில் நடைபெறும் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்க தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகரராவ் ஏற்கனவே முயற்சித்து வரும் நிலையில் மம்தா பானர்ஜியும் களமிறங்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • Allu Arjun arrest and controversy பூகம்பமாய் வெடிக்கும் அல்லு அர்ஜுன் பிரச்சனை…வீட்டின் முன்பு கலவரம்…கண்டுகொள்ளாத போலீஸார்..!
  • Views: - 769

    0

    0