ஆசிரியர் பணி நியமன முறைகேடு… அமைச்சர் மீது செருப்பு வீச்சு : அர்பிதா முகர்ஜி வாக்குமூலத்தால் மம்தா அரசுக்கு நெருக்கடி!!

Author: Babu Lakshmanan
2 August 2022, 8:15 pm

ஆசிரியர் பணி நியமன முறைகேட்டில் சிக்கியுள்ள அமைச்சர் மீது காலணி வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு வங்கத்தில் ஆசிரியர் பணி நியமனங்களில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. இதைத் தொடர்ந்து, அமைச்சர் மற்றும் அவரது தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். தெற்கு கொல்கத்தாவில் உள்ள குடியிருப்பில் வசித்து வரும் அமைச்சரின் நெருங்கிய பெண் உதவியாளர் அர்பிதா முகர்ஜியின் வீட்டில் இதுவரை நடத்திய சோதனையில் ரூ.50 கோடி ரொக்கம் கைப்பற்றப்பட்டது.

இதன் அடிப்படையில், மேற்குவங்க அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி கைது செய்யப்பட்டார். அவரிடம் அமலாக்கத்துறையினர் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட போது, நெஞ்சுவலி ஏற்பட்டு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர், சிகிச்சை முடிந்து மீண்டும் அவரை காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.

இதனிடையே, மீண்டும் மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு பார்த்தா சாட்டர்ஜி போலீசாரால் அழைத்து வரப்பட்டார். பரிசோதனை முடிந்து கிளம்புவதற்காக பார்த்தா சாட்டர்ஜி காரில் காத்திருந்த போது, மருத்துவமனைக்கு வந்த பெண் ஒருவர், தான் அணிந்திருந்த இரண்டு செருப்புகளையும் அவர் மீது வீசினார். ஆனால், செருப்பு கார் மீது விழுந்தது. இதனால், சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர், அந்தப் பெண்ணை பிடித்து போலீசார் விசாரணை செய்ததில், அந்த பெண்ணின் பெயர் சுப்ரா எனவும், ஒரு குழந்தைக்கு தாயான அவர் அம்தலா பகுதியில் வசித்து வருவதும் தெரியவந்தது.

“மருந்து வாங்கக் கூட முடியாத நிலையில் பலர் வாழ்ந்து வரும் நிலையில், கோடிக்கணக்கில் பணத்தை வைத்துக் கொண்டு, அடுக்குமாடி குடியிருப்பு வாங்குகின்றனர். மருத்துவமனைக்கு பெரிய கார்களில் வருகின்றனர். இதனால், தான் செருப்பு வீசினேன்,” எனக் கூறினார்.

இந்த நிலையில், அமலாக்கத்துறையினரின் பிடியில் இருக்கும் அமைச்சரின் பெண் உதவியாளர் அர்பிதா முகர்ஜி, “எனது வீட்டில் சிக்கிய பணம் என்னுடையது அல்ல. நான் வீட்டில் இல்லாத போது பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது,” என்றார்.

இதனால், தொடர்ந்து அர்பிதா முகர்ஜியிடம் தொடர்ந்து விசாரணை நடத்தினால் உண்மை புலப்பட்டு விடும் என்ற நம்பிக்கையில் அமலாக்கத்துறையினர் விசாரணையை தொடர்ந்து வருகின்றனர். இது முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 688

    0

    0