ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் பொதுவேட்பாளர் இவரா? சம்மதித்ததா எதிர்க்கட்சிகள்? மம்தா கட்சியில் இருந்து விலகிய மூத்த தலைவரால் சலசலப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
21 June 2022, 12:52 pm

இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தின் பதவிக்கலம் முடிவடைய உள்ளது. இந்த நிலையில் புதிய ஜனாதிபதியைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் வரும் ஜூலை 18ஆம் தேதி நடக்கிறது, ஜூலை 21ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது.

வரும் 29ம் தேதி வேட்புமனுத் தாக்கலுக்கு கடைசிநாளாகும். ஜனாதிபதி தேர்தலுக்கு தங்களின் பொது வேட்பாளரை தேர்வு செய்யும் முனைப்பில் தற்போது எதிர்க்கட்சிகள் ஈடுபட்டுள்ளன.

முன்னதாக பொதுவேட்பாளராக சரத்பவார் மற்றும் பரூர் அப்துல்லாவை எதிர்க்கட்சிகள் நாடிய போதும் அவர்கள் பாஜகவுக்கு எதிராக களமிறங்க மறுத்துவிட்டனர். இதையடுத்து மேற்கு வங்க முன்னாள் ஆளுநரும் காந்தியின் பேரனுமான கோபால கிருஷ்ணன் காந்தியிடம் வேண்டுகோள் வைத்தனர். ஆனால் அவரும் மறுத்துவிட்டார்.

இந்த நிலையில் பாஜகவின் உயர்மட்டக் குழுவான நாடாளுமன்றக் குழு இன்று மாலை டெல்லியில் கூடுகிறது. இந்தக் கூட்டத்தில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளர் குறித்த பெயர் ஆலோசிக்கப்படலாம் என்று தெரிகிறது.

இந்நிலையில் ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் பொதுவேட்பாளராக முன்னாள் நிதியமைச்சர் யஷ்வந்த் சின்கா நிறுத்தப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. அதற்கு ஏற்றார்போல் யஷ்வந்த் சின்கா இன்று திரிணமூல் காங்கிரஸ் துணைத்தலைவர் பதவியிலிருந்து விலகிவிட்டதாகத் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், “திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் எனக்கு அளித்த மரியாதை மற்றும் கவுரவத்துக்கும் மம்தாபானர்ஜிக்கு நான் நன்றி கடன்பட்டிருக்கிறேன். இப்போது தேசத்தின் பெரிய நோக்கத்திற்காக நான் கட்சியில் இருந்து ஒதுங்கி, எதிர்க்கட்சி ஒற்றுமைக்காக பணியாற்ற வேண்டிய நேரம் இப்போது வந்திருக்கிறது. என்னுடைய செயலுக்கு மம்தாஜி பானர்ஜி சம்மதிப்பார் என்று நான் நம்புகிறேன்” என்று அதில் யஷ்வந்த் சின்கா பதிவிட்டுள்ளார்.

இதனிடையே ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்துவது தொடர்பாக சரத்பவார் தலைமையில் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு எதிர்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில் திமுக உள்பட 17 எதிர்கட்சிகள் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • ajith fans released poster on ilaiyaraaja compensation on good bad ugly viral on internet இசைஞானியே! இது தர்மமா? போஸ்டர் வெளியிட்டு புலம்பும் அஜித் ரசிகர்கள்! அடப்பாவமே…