காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவர் யார்? தேர்தல் தேதியை அறிவித்த செயற்குழு.. காணொலியில் பங்கேற்ற சோனியாகாந்தி!!
Author: Udayachandran RadhaKrishnan28 August 2022, 6:27 pm
காங்கிரஸ் கட்சிக்கு நிரந்தர தலைவரை தேர்வு செய்ய வேண்டும். கட்சியில் சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என, கட்சியின் மூத்த தலைவர்கள் 23 பேர் பேர்க்கொடி துாக்கினர்.
இதையடுத்து கட்சியில் அமைப்பு ரீதியிலான தேர்தல்களை நடத்தி, இறுதியில் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தலை நடத்த முடிவு செய்யப்பட்டது. இம்மாதம், 21லிருந்து செப்., 20க்குள் கட்சிக்கு புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடத்தி முடிக்கப்படும் என, கடந்தாண்டே அறிவிக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகள் விறு விறுப்பாக நடந்தன.
காங்கிரஸ் சார்பில் நாடு தழுவிய யாத்திரை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த யாத்திரை, செப்., 7ல் கன்னியாகுமரியில் துவங்குகிறது. இதனால் கட்சி தலைவர் தேர்தலை நடத்துவது மேலும் தாமதமாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியானது.
இந்நிலையில் காங்கிரசின் செயற்குழு கூட்டம் வீடியோ கான்பரன்சிங் முறையில் நடந்தது. இக்கூட்டத்தில், சோனியா, ராகுல், பிரியங்கா, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் மத்திய அமைச்சர் ஆனந்த் சர்மா, அம்பிகா சோனி, மீரா குமார், தீபிந்தர் ஹூடா மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
பின்னர் அக்கட்சியின் ஜெய்ராம் ரமேஷ், வேணுகோபால் உள்ளிட்டோர் பத்திரிகை நிருபர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறுகையில், காங்கிரஸ் புதிய தலைவரை தேர்வு செய்ய அக்.,17 ல் தேர்தல் நடக்கும். மாநில தலைமை அலுவலகங்களில் தேர்தல் நடக்கும். பதிவான ஓட்டுக்கள் அக்.,19ல் எண்ணப்படும். தேர்தலுக்கான அறிவிப்பு செப்.,22ல் வெளியிடப்படும்.
0
0