பிளான் B கை கொடுக்குமா? 41 தொழிலாளர்களின் உயிர் காப்பாற்றப்படுமா? உத்தரகாண்டில் நடப்பது என்ன?!!!

Author: Udayachandran RadhaKrishnan
27 November 2023, 8:45 am

பிளான் B கை கொடுக்குமா? 41 தொழிலாளர்களின் உயிர் காப்பாற்றப்படுமா? உத்தரகாண்டில் நடப்பது என்ன?!!!

உத்தரகண்ட் மாநிலத்தின் இமயமலை சூழ்ந்த பகுதியான சில்க்யாராவில் உள்ள சுரங்கத்தில் 41 தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்தனர். கடந்த 12 ஆம் தேதி திடீரென ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக சுரங்கம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.

இதன் காரணமாக சுரங்கத்தை விட்டு வெளியேறும் வழிகள் அடைபட்டன. 41 தொழிலாளர்களும் சுரங்கத்திற்குள் சுக்கிக்கொண்டனர். கடந்த 16 நாட்களாக தொழிலாளர்கள் சுரங்கத்திற்கு உள்ளே சிக்கி உயிருக்கு போராடி வருகின்றனர்.
தொடர்ந்து தொழிலாளர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.
மீட்புப் பணியில் தீயணைப்பு படையினர், தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர், மாநில பேரிடர் மீட்பு படையினர் என ஏராளமான வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

உத்தரகண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி மீட்புப் பணிகளை துரிதப்படுத்துமாறு உத்தரவிட்டு இருக்கிறார். சுரங்கத்தில் சிக்கியுள்ள தொழிலாளர்களை பத்திரமாக மீட்குமாறு பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தி உள்ளார்.

சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் 41 தொழிலாளர்களுக்கு உணவுப் பொருட்களை வழங்கவும், தொடா்பு கொள்ளவும் 4 அங்குல அளவிலான குழாய் பயன்படுத்தப்பட்டது.

கடந்த வாரம் திங்கட்கிழமை 53 மீட்டர் தொலைவு கொண்ட இடிபாடுகளுக்கு மத்தியில் 6 அங்குல குழாய் செலுத்தப்பட்டது. இதன் மூலமாக சுரங்கத்தில் உள்ள தொழிலாளர்களுடன் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் தகவல் பரிமாற்றத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். உணவு, குடிநீரும் வழங்கப்பட்டு வருகிறது.

இந்தக் குழாயில் எண்டோஸ்கோபி கேமரா அனுப்பப்பட்டு, சுரங்கத்தில் சிக்கி உள்ள தொழிலாளர்கள் என்ன செய்கிறார்கள் என்பது வீடியோ மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் அவர்களின் வீடியோ காட்சிகளும் வெளியிடப்பட்டன.

அதன் மூலம் தொழிலாளர்களுக்கு தேவையான அறிவுரைகளை அதிகாரிகள் அளித்து வருகின்றனர். சமீபத்தில் தொழிலாளர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகாமல் நேரத்தை செலவிட விளையாட்டு பொருட்கள் குழாய் மூலம் அனுப்பப்பட்டன.

கிடைமட்டத்தில் துளையிட்டு தொழிலாளர்களை மீட்கும் பணி தொடங்கியது. உறைய வைக்கும் கடும் குளிரால் இந்த பணிகளில் அவ்வப்போது தொய்வு ஏற்பட்டது. ஆகர் இயந்திரத்தின் மூலமாக இந்த துளையிடும் பணி நடைபெற்று வந்த நிலையில் சுரங்கத்தில் உள்ள கான்கிரிட் கம்பிகள் காரணமாக துளையிடும் பணி கடுமையாக பாதிக்கப்பட்டது. அகர் இயந்திரத்தின் பிளேடுகள் கான்கிரீட் கம்பிகளால் உடைந்தன.

சில மணி நேரங்களுக்கு பிறகு மீண்டும் துளையிடும் பணி தொடங்கியது. அப்போதும் இரும்பு கம்பிகள், கம்பி வலைகள் இயந்திரத்தின் பிளேடுகளில் சிக்கின. இந்த தடைகளை மீட்புப்பணியில் உள்ள வீரர்களை அனுப்பி சிறிய இயந்திரங்களை கொண்டு அகற்ற முடிவு செய்யப்பட்டது.

அந்த பணியிலும் தொடர்ந்து தடங்கல்கள் ஏற்பட்டு வரும் நிலையில், மீட்புப் படையினர் வேறு வழிகளில் தொழிலாளர்களை மீட்க முடிவு செய்தனர். அதன்படி செங்குத்தான வடிவில் துளையிட முடிவு செய்யப்பட்டது.

இதற்கு ஏற்ற இடம் கண்டறியப்பட்டு துளையிடும் பணி நடைபெற்று வருகிறது. ஆனால், இந்த பணி நிறைவடைய 4 நாட்கள் வரை ஆகும் என செய்திகள் தெரிவிக்கின்றன. இதனால் உள்ளே சிக்கியுள்ள தொழிலாளர்கள் நிலை கவலையை ஏற்படுத்தி உள்ளது.

  • Mysskin controversial speech வாய திறந்தால் கெட்ட வார்த்தை…மேடை நாகரீகம் தெரியாதா…மிஷ்கினை வறுத்தெடுத்த பிரபல இயக்குனர்கள்..!