மீண்டும் அரியணை ஏறும் சித்தராமையா? டி.கே சிவக்குமாருக்கு துணை முதல்வர் பதவி? வெளியான தகவல்!
Author: Udayachandran RadhaKrishnan18 May 2023, 9:37 am
கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 34 ஆண்டுகளுக்கு பிறகு அதிக இடங்களை கைப்பற்றி வெற்றி வாகை சூடியது. அதாவது 223 தொகுதிகளில் போட்டியிட்டு 135 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியை பிடித்துள்ளது.
கடந்த 13-ந் தேதி ஓட்டு எண்ணிக்கை முடிவடைந்த மறுநாளே காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் பெங்களூருவில் நடைபெற்றது. மேலிட பார்வையாளர்கள் சுஷில்குமார் ஷிண்டே, ஜிதேந்திர சிங், தீபக் பபாரியா ஆகியோரின் முன்னிலையில் இந்த கூட்டம் நடைபெற்றது.
இதில் புதிய முதல்-மந்திரியை தேர்ந்தெடுக்கும் அதிகாரம் காங்கிரஸ் மேலிடத்திற்கு வழங்கி ஒரே வரியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதைத்தொடர்ந்து மேலிட பார்வையாளர்கள், ஒவ்வொரு எம்.எல்.ஏ.விடமும் தனித்தனியாக கருத்துகளை கேட்டு அறிந்தனர். யாரை முதல்-மந்திரி ஆக்கலாம் என்று அவர்கள் கருத்துகளை தெரிவித்தனர்.
கர்நாடக சட்டசபை தேர்தலில் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றிய நிலையிலும், கடந்த 5 நாட்களாக புதிய முதல்வர் யார் என காங்கிரஸ் தலைமை அறிவிக்காமல் இருந்து வந்தது. இதற்கான பேச்சுவார்த்தை தொடர்ந்து கொண்டே இருந்தது.
இதில் சித்தராமையாவா.? டி.கே.சிவகுமாரா.? யார் கர்நாடக முதல்வர் என்று ஆலோசனையில், தற்போது முடிவு கிடைத்துள்ளதாக தொடர்ந்து தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது, புதிய முதல்வராக ஏற்கனவே முதல்வர் பதவியில் இருந்த சித்தராமையா தேர்வு செய்யப்பட்டதாகவும், துணை முதல்வராக டி.கே.சிவகுமார் தேர்வு செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் மே 20ஆம் தேதி பதவி ஏற்பு விழா நடைபெற உள்ளது எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இன்று இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.