சீட்டாக்களுக்கு பெயர் வைக்க உங்களுக்கு ஒரு வாய்ப்பு : மனதின் குரல் நிகழ்ச்சி மூலம் மக்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!!
Author: Udayachandran RadhaKrishnan25 September 2022, 1:42 pm
இந்தியா வந்துள்ள சிறுத்தைப்புலிகளை காண்பதற்கான போட்டியில் கலந்து கொண்டு முதல் பார்வையாளராகும் வெற்றி வாய்ப்பினை பெறுங்கள் என பிரதமர் மோடி பேசியுள்ளார்.
பிரதமர் மோடி, மனதின் குரல் என்ற நிகழ்ச்சியின் மூலம் மாதம்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் அகில இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார்.
அதன்படி, இந்த மாதத்திற்கான மனதின் குரல் நிகழ்ச்சி இன்று காலை 11 மணிக்கு ஒலிபரப்பானது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரதமர் மோடி பேசும்போது, சீட்டாக்கள் (சிறுத்தைப்புலி) இந்தியாவுக்கு மீண்டும் வந்ததற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள மக்கள் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். அவற்றை பற்றி பேசும்படி எண்ணற்றோர் குறுஞ்செய்திகளை அனுப்பி வருகின்றனர்.
1.3 கோடி இந்தியர்கள் ஆனந்தத்திலும், பெருமையாலும் நிரம்பியுள்ளனர். சிறுத்தைப்புலிகளை அதிரடி படை ஒன்று கண்காணிக்கும் பணியில் ஈடுபடும். அதன் அடிப்படையில், நீங்கள் எப்போது சிறுத்தைப்புலிகளை பார்வையிடலாம் என்பது முடிவு செய்யப்படும் என கூறியுள்ளார்.
தொடர்ந்து அவர் கூறும்போது, சிறுத்தைப்புலிகளுக்கு பெயர் சூட்டுவது மற்றும் அதற்கான பிரசாரத்திற்கு மக்களாகிய உங்களது பார்வைகளை பகிர்ந்து கொள்ளும்படி நான் கேட்டு கொள்கிறேன்.
நமது பாரம்பரிய முறையின்படி அவற்றுக்கு பெயர் சூட்டினால் அது சிறப்புடன் இருக்கும். இதேபோன்று, விலங்குகளை மனிதர்கள் எப்படி நடத்த வேண்டும் என்ற ஆலோசனைகளையும் வழங்குங்கள். இந்த போட்டியில் நீங்களும் பங்கெடுத்து கொள்ளுங்கள்.
சிறுத்தைப்புலிகளை முதன்முறையாக காணும் வாய்ப்பு பெறும் நபர் நீங்களாக கூட இருக்கலாம் என கூறியுள்ளார். தொடர்ந்து அவர், சண்டிகர் விமான நிலையத்திற்கு விடுதலை போராட்ட வீரரான பகத் சிங்கின் பெயரை சூட்ட முடிவு செய்யப்பட்டு உள்ளது என்றும் கூறியுள்ளார்.